Saturday 20 October 2012

உயர்ந்த குறிக்கோள் ஒன்றை ...................!

உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும், முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்று விரும்புகின்றனர். நீங்கள் முன்னேற, உயர, வளர விரும்பினால் உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டு, உழைக்கத் தயாராகி விடவேண்டும்.


ஆசை காரணமாக உயர்ந்த குறிக்கோளை வரையறுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால், குறிக்கோளை நோக்கி உழைக்கத் துவங்கும் போது மலைப்பாகத் தோன்றும். மலைத்துப்போய் ஒதுக்கிவிடுவீர்களாயின் வாழ்க்கை முழுதும் ஆசைப்படுபராகவும், கனவு காண்பவராகவுமே கழிக்க வேண்டி நேரும்.

உங்கள் குறிக்கோளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முடியாது என்னும் எண்ணம் உடனே வந்து உங்களிடம் ஒட்டிக்கொள்ளும். முடியாது என்னும் எண்ணத்தைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை, பகுதி பகுதியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். பிரித்து எண்ணிப் பார்த்தால் மலைப்போ, திகைப்போ தோன்றாது.  

உங்களால் ஆயிரம் கி.மீ. நடக்க முடியுமா? என்று கேட்டால் முடியாது என்னும் பதிலை உடனே கூறி விடுவீர்கள்.

உங்களால் ஆயிரம் கி.மீ. தூரம் ஆயிரம் நாட்களில் நடக்க முடியுமா? என்று கேட்டால் ஏன் முடியாது? என்று உற்சாகமாக்க் கேட்பீர்கள். குறிக்கோளை அடைய முடியுமா? என்று ஒட்டுமொத்தமாக ஏன் சிந்திக்கிறீர்கள்?

உயர்ந்த குறிக்கோள்களை பத்து ஆண்டுகளில் அடைந்தாலே மாபெரும் வெற்றிதான். பத்து ஆண்டுகளில் 120 மாதங்கள் உள்ளன.

3650 நாட்கள் உள்ளன. உங்கள் செயல்திட்டத்தை உருவாக்கும் போது குறிக்கோளை 10 ஆண்டுப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஆண்டுப் பகுதியையும் 12 மாதப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதப் பகுதிகயையும் 30 நாட்பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

இப்போது எளிதாகத் தோன்றுகிறதா இல்லையா?

ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை, என்னும் பழமொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.

உலகம் பார்த்து வியக்கும் தாச்மகாலோ செங்கோட்டையோ பல ஆண்டுகள், பல மாதங்கள், பல்லாயிரம் நாட்கள் தொடர் உழைப்பில் உருவானவை தாமே!

பத்தடுக்கு மாளிகையேயாயினும் ஒவ்வொரு செங்கல்லாகவே அடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடுக்காகவே உயர்ந்து மாளிகை ஆகிறது.

ஆகவே, நீங்கள் எடுத்துக்கொண்ட குறிக்கோள் அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும். தொடர் முயற்சியும், விடா முயற்சியும் வெற்றி என்னும் பெருமையைத் தரும்.

இதை நீங்கள் புரிந்து கொண்டால் உழைப்பின் மேன்மையை உணர்ந்து செயல்படுவீர்கள். உழைப்பின் வாரா நன்மைகள் உள்ளனவா?

உழைப்பதற்கு அஞ்சுபவர்களைப் பாருங்கள் அவர்கள் இரண்டு வகையினர், ஒருவகையினர் வறுமையிலும், பற்றாக் குறையிலும் பரிதவித்துக் கொண்டிருப்பர்.

இன்னொரு வகையினர் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குள்ளநரிகளாக இருப்பர்.

முதல்வகையினர் சோம்பேறிகள், இரண்டாவது வகையினர் மோசடிப் பேர்வழிகள்.
சோம்பேறிகள் தங்கள் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள அதிட்டத்தை நம்பி இருப்பார்கள். லாட்டரிச்சீட்டு, குதிரைப் பந்தயம், சீட்டாட்டம் போன்றவைகளில் ஈடுபட்டு, மேலும் கடன்பாட்டு மனிதப் பிறவியை மாசுபடுத்திக் கொள்வார்கள்.

குறுக்குவழியினர் திருட்டு, ஏமாற்று, வாட்டி வதைத்து வட்டி வாங்குதல், கலப்படம், கள்ளச்சந்தை, கொள்ளை, கொலை, கொள்கையில்லா அரசியல், இலஞ்சம், ஊழல் போன்ற கொடுஞ்செயல்களால் பணம் சேர்க்க முயல்பவர்கள்.

இவர்கள் சேர்க்கும் செல்வம் களவினால் ஆகிய ஆக்கம்.
அது அளவிறந்து ஆவது போலக் கெடும்.
இந்த இருவகையிலும் சேராதவரா நீங்கள்? நல்லது.

இயற்கை தரும் தண்டைனைக்குத் தப்பி விட்டீர்கள். நீங்கள் செல்வம் சேர்க்க உழைப்பது நல்லது தான்.

ஆனால், இயற்கையுடன் முரண்பட்ட வழிகளில் முயன்றால், தற்காலிகமாக உயர்வது பொன்று தோற்றமளிப்பினும் முடிவு பரிதாபமாக இருக்கும். 

சட்டத்தின் பார்வையிலிருந்து ஒருவன் தப்பி விடலாம. இயற்கையின் பார்வையிலிருந்து எவரும் தப்ப முடியாது.

இயற்கை ஒழுங்கின்மையையோ, ஒழுங்கீனத்தையோ ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை.

சரியான நேரத்தில், சரியான முறையில் இயற்கை தன் நியாயத்தீர்ப்பை நேர்த்தியாய் வழங்கிவிடும்.

நீங்கள் இயற்கையுடன் ஒன்றுபட்ட முறையில் உழைப்பீர்களானால் அதுவே உயர்வைத் தரும். ஊக்கமின்றிச் சோம்பி இருப்பீர்களானால் அதுவே தாழ்வே உருவெடுக்கும்.

இயற்கையுடன் ஒன்றுபடும் போது உங்கள் செயல் திட்டங்களில் உண்மையும், நேர்மையும் ஒளிரும்.

அப்போது இயற்கை அன்னை உங்கள் கரம் பிடித்து வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வான்.

இயற்கையின் உதவியோடு குறிக்கோளை அடைய செயல்திட்டத்தை வகுத்துவிட்டீர்கள். இனி தயக்கமோ, தாமதமோ இல்லாமல் முதல் அடியை எடுத்து வைத்து விடுங்கள்.

ஆயிரம் கிலே மீட்டர் பயணம் ஆயினும் அது ஓரடியில்தான் தொடங்குகிறது என்பது அற்புதமான மொழி.

வெற்றி கிடைக்குமா? என்று சந்தேகத்துடன் சிந்திக்க வேண்டாம். நான் நம்புவது நடந்தே தீரும் என்னும் எண்ணத்துடன் அடுத்த அடியை எடுத்து வையுங்கள்.

உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய சில உளவியல் சார்ந்த, அறிவியல் ரீதியான ஒரு செய்தியை அறிந்து கொள்ளுங்கள்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும், உயர வேண்டும், வளர வேண்டும், விரும்புவதை ( வெற்றி ) அடையவேண்டும் என்றே இயற்கை விரும்புகிறது.

அதற்கேற்பவே மனிதனின் உடல் இயக்க விதிகளை இயற்றி வைத்திருக்கிறது. ஒரு குழந்தையின் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கினால் இந்த உண்மை தெளிவாகும்.

தாய் ஒரு குழந்தையைப் பெறுகிறாள். பிறந்தபின் அதைக் கையில் எடுத்துச் சீராட்டாமல் உயிர் வாழ்வத்ற்குரிய உணவை ( பாலை ) மட்டுமை புகட்டிவந்தால் போதும், குழந்தை அழுது, அலறி, பசியாறி, உறங்கி மீண்டும் அழுது… உயிர் வாழும்.

மூன்று மாதங்கள் இப்படியே தொடர்ந்தாலும் குழந்தை ஒருநாளில் குப்புற விழும். மீண்டும் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவை மட்டும் புகட்டிக்கொண்டே வந்தா அது தானே எழுந்து அமரும்.

தொடர்ந்து உணவூட்டி வந்தால் ஒரு நாள் தானே எழுந்து நிற்கும், விழும், அழும், ஆனாலும் அடங்கி இராமல் மீண்டும் எழுந்து நின்று தன் முதலடியை முன்னோக்கி எடுத்து வைக்கும்.

அதுமட்டுமின்றி உடல் மேல் நோக்கி வளரும். தன் சூழ்நிலையிலிருந்து அடைய முயற்சித்து வெற்றி பெறும். குழந்தையால் எப்படி முடிகிறது. 

இயற்கை, தான் இயற்றி வைத்துள்ள சட்டங்களின்படி அதனோடு ஒத்துழைக்கிறது.

ஆகவே, நீங்கள் வாழ்வில் உயரவேண்டும் என்பதும், முன்னேற வேண்டும் என்பதும், வளர வேண்டும் என்பதும், விரும்புவதை ( வெற்றி ) அடையவேண்டும் என்பதும் இயற்கைச் சட்டம்.

இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொண்டால். நீங்கள் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம்.

இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொள்ளவதா?
எப்படி?
உங்கள் குறிக்கோள் என்ன?
அதை நிறை வேற்றுவதற்கு நீங்கள் வரையறுத்துள்ள ஆண்டு எது?
அதை அடைவதற்கு நீங்கள் தேர்வு செய்துள்ள தொழில், வணிகம் அல்லது விற்பனை எது?

அந்தத் தொழில், வணிகம் அல்லது விற்பனை தொடர்பான முதல் நடவடிக்கையை இன்றே, இப்பொழுதே தொடங்குங்கள்
ஒத்தி வைக்காதீர்கள்.

தள்ளிப்போடாதீர்கள் அடுத்த நாளில் இன்னொரு நடவடிக்கை, மறுநாள் அது தொடர்பான மேலும் ஒரு நடவடிக்கை.

ஒரு வாரத்தில் பொருத்தமான ஏழு செயல்கள், முன்னேற்றத்தை நோக்கி, மாதத்தில் முப்பது செயல்கள், ஒரு ஆண்டில் முந்நூற்று அறுபத்தைந்து செயல்கள், ஒரு ஆண்டில் முற்நூற்று அறுபத்தைந்து செயல்கள்.

ஒரு ஆண்டு முழுவதும் நீங்கள் தொடர்ந்து செய்த செயல்கள் தொழிலாக, வணிகமாக, விற்பனை வாய்ப்பாக உருவாகி இருக்கும் முந்நூறு அறுபத்தைந்து செங்கற்கள் சேர்த்த ஒரு சுவராவது போன்று.

இப்படியாக வளர்ச்சியை நோக்கி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும், பல சுவர்களாக மாறி ஒன்றுக்கொன்று இணைந்து வெற்றி என்னும் மாளிகையாக மாறிவிடும்.

முயற்சியை நிறுத்தாமல் விடாமுயற்சி யாகவும் தொடர்முயற்சியாகவும் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமனா இயற்கைச் சட்டம். 

தினமும் ஒரு சாதகமான நடவடிக்கை எடுக்கும் போது சட்டப்படி உங்களுக்கு வெற்றி உத்திரவாதம் ஆகிறது.

அதைவிடுத்து நேரம் கிடைக்கும் போதும், விருப்பம் ஏற்படும் போதும் மட்டும் உழைப்பது மற்ற நேரங்களில் சோம்பி இருப்பது, விட்டு விட்டு முயல்வது, ஏவராவது விரட்டினால் மட்டுமே உழைப்பது என்று நினைப்பவருக்கு வெற்றி எட்டாக் கனியாகும்.

வெற்றி செடி வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பார்த்து நடவேண்டாம் உழைப்பு என்னும் நீரையும், நம்பிக்கை என்னும் உரத்தையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்.

நாள்தோறும் ஒரு நடவடிக்கை என்னும் ஆலோசனையைத் தவறாமல் கடைப்பிடியுங்கள். கடைப்பிடிக்கும் போது இயற்கையின் கரத்தோடு உங்கள் கரம் இணைந்து விடுகிறது. இணையும்போது இயற்கையின் கரத்திலுள்ள வெற்றி மாலை உங்கள் கழுத்திற்கு வந்துவிடுகிறது.

உழைக்க உறுதி கொண்டவன் எதிலும் வெற்றி பெறுகின்றான். பொது வாழ்விலும் தனிமனித வாழ்விற்கும் உழைப்பே உயர்வு தரும்.

சோம்பல் ஒருவனை நரகத்திற்குத்தான் கொண்டு போய்ச் சேர்க்கும். உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும் முன்னேற வேண்டும் வளர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

நீங்கள் முன்னேற உயர வளர
விரும்பினால் உயர்ந்த குறிக்கோள்
ஒன்றை வரையறுத்துக் கொண்டு
உழைக்கத் தயாராகி விடவேண்டும்.

ஆசை காரணமாக உயர்ந்த குறிக்கோளை
வரையறுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும்.

ஆனால் குறிக்கோளை நோக்கி உழைக்கத் துவங்கும் போது மலைப்பாகத் தோன்றும். மலைத்துப்போய் ஒதுக்கி விடுவீர்கள்
ஆயின் வாழ்க்கை முழுதும் ஆசைப்படுபராகவும் கனவு காண்பவராகவுமே கழிக்க வேண்டி நேரும். 

நன்றிகள்