Monday 1 October 2012

தலை நிமிர்ந்து தமிழன் .....................!

துப்பாக்கி, பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராசராச  சோழனையும், திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள்.

தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்?


இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.

இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான்.

நேர்த்தியான (Tie), செருப்பு (Shoe) நீங்கள் ஆரம்பித்து வைக்கும் கலாசாரம் இறுதியில் ஒருவகை இசை நடனத்துடன் போதையை தரும் பானங்கள்   விற்கும் (Disco Bar) இடத்தில் முடிகிறது. தமிழின் கழுத்தில் கயிரை சுற்றி, சுருக்கு போட்டு,தூக்கு மேடையில் ஏற்றி, எங்களிடம் கயிற்றை கொடுத்து இழுக்க சொல்லிவிட்டு நங்கள் இழுக்கும் நேரத்தில் கொல்கிறானே, கொல்கிறானே என வாயில் அடித்து கொள்வதில் என்ன பயன்.

ஒரு வகையில் ஆங்கிலமும் முழுதும் தெரியாமல் தமிழும் தெரியாமல் பல பேரை அரை வேக்காடுகளாக இரண்டும் கெட்டான்களாக அலையை விட்ட உங்களை அல்லவா நங்கள் குறை சொல்ல வேண்டும். பம்பாயிலிருந்து தமிழ்ப்படத்தில் கதாநாயகிகளாக நடிப்பதற்கு வேற்றுமொழி நடிகைகள்  தமிழகம் வந்ததும் கொச்சையாக, பிழைபிழையாக தமிழ் பேசுவது போல் தமிழ் பேசும் தமிழ்ப்பெண்கள், சுத்தமாக தமிழ் பேசும் பெண்கள் எத்தனை பேர். 

லண்டனிலிருந்து இப்பொழுது தன் இறங்கியவர்கள் போல் தமிழே வாயில் நுழையாத இளைஞர்கள் எத்தனை பேர்.வள்ளுவனும்,ஒளவையும் நல்லவேளை இன்று இல்லை இருந்திருந்தால் அவர்களையும் இவர்கள் கெடுத்திருப்பார்கள்.

அனைத்தையும் மீறி ஏழ்மையின் காரணமாக அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிப்போரின் நிலைமையோ இன்னும் பரிதாபகரமானது. ஐந்தாறு பயிற்சி வகுப்புக்களிற்குச் செல்லாமல் 1100 மதிப்பெண் பெற்றாலும் ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் உதாசீனபடுத்தப் படுகிறார்கள்.

"ஆங்கிலத்துக்கு வெட்டி - வெளியே (Cut - Out), தமிழுக்கு கிடைக்கும் -வெளியே (Get - Out)  " என்பதே நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் தமிழில் பட்டம் பெற்றால் அவன் நிலைமை என்ன என்பதை கற்றது தமிழ் படத்தை பார்த்தால் நன்கு புரியும்.ஏன்?,

மொழி, நாடு, சமுதாயம் என்று உயிரை விட்ட பாரதியையே நாம் அவன் இறந்த 10,20 ஆண்டகளுக்கு பிறகு தானே புரிந்து கொண்டோம். காக்கையும், குருவியையுமே தன் இனம், தன் உறவு என்று முழங்கியவனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட உறவுகளே மொத்தம் 10 - 15 தானே.

இந்த பதிவை இதோடு நிறுத்தலாம் இனி சொல்ல என்ன இருக்கிறது?. ஆனால் அப்படி செய்தால் நானும் வெட்டியாக குறைகூறுவோர்களில் ஒருவனாகி விடுவேன். அதற்கு பதில் எனக்கு தெரிந்த வரை நாம் இதற்கு என்ன செய்யலாம் என கூறுகிறேன்.

முதலில் தமிழை பேசுவதால் மட்டுமே தமிழ் வளரும் என்ற எண்ணத்தை விடுத்து தமிழில் எழுதவும், படிக்கவும் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். அப்படி நாம் தொட்டிலான பள்ளி முதலே தமிழை கற்று கொடுக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் குழந்தைகளுக்கு 5 வகுப்பு வரை தமிழ் கட்டாயம் படமாக இருக்க வேண்டும் என்று சட்ட மசோதா இயற்றப்பட்டது. நமது மெத்த படித்த மேதாவிகள் அன்று அதை எதிர்த்து ரத்து செய்தனர். அந்த சட்டம் மீண்டும் வர வேண்டும். தனியாக பிராத்மிக், மத்யமா என இந்தியும், தனியார் கல்வி நிறுவங்களில் பிரெஞ்சும், யே(ஜெ)ர்மனும் பயிலும் நீங்கள் தமிழ் படிக்க முடியாதா?.

என்னை கேட்டால், தமிழை 12-ம் வகுப்பு வரை கட்டாய படமாக மட்டும் வைக்காமல், முன்பு தொழில்கல்வி நுழைவுத்தேர்வுக்கு குறைந்தபட்ச கட்-ஆப் மதிப்பெண் முறை போல் தமிழில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றால் தான் மேற்படிப்புக்கு தகுதி உண்டு என அறிவிக்கலாம்.

முன் சொன்னது போல் தமிழர்கள் உலகத்துக்கே முன்னோடிகளாய் எப்படி வாழ்ந்தனர் என்றும், மேற்க்கை விட தமிழும் தமிழ் கலாச்சாரமும் எவ்வளவு பழமையானது, உயர்ந்தது என்றும் சொல்லி வளர்க்க வேண்டும். 

சேக்சு(ஸ்)பியருக்கு நூறு மடங்கான வள்ளுவனும், கம்பனும்.... அலக்சாண்டருக்கும், நெப்போலியனுக்கும் எந்த விதத்திலும் குறையாத ராசா(ஜா) ராச(ஜ)னும், நரசிம்மனும் வாழ்ந்த பூமி இது என்று சொல்லி வளர்க்க வேண்டும். தான் எங்கிருந்து வருகிறோம், தனது பூர்வீகம் என்ன என்று தெரியாததால் தான் இளைஞர்கள் இப்படி இருக்கின்றனர்.

பாப்பம்பட்டி பழனிச்சாமி பேரனுக்கு இது போதும்" என்று என் நண்பன் அடிக்கடி சொல்லுவான். அப்படி குழந்தைகளை பாப்பம்பட்டி பழனிச்சாமி பேரனாக வளர்க்காமல், சே(ஷே)க்ஸ்பியர் பேரனாக விளைந்த கொடுமையே இது, இதை மாற்றி இனிமேலாவது சேக்சுபியர் பேரன்களாக குழந்தைகளை வளர்க்காமல் இருக்க வேண்டும்.

ஒரு மரத்தின் ஆயுளும், வலிமையும் அதன் கிளைகளிலே இல்லை அதன் வேரிலேயே இருக்கிறது. அப்படிப்பட்ட வேரான பூர்விகதையும், பண்பாட்டையும் புகட்ட பெற்றோர்களும், சமுதாயமும், பள்ளிகளும் முன் வர வேண்டும். ஆங்கிலத்தை முற்றும் புறக்கணித்து தமிழ் வழி கல்வியை நாட சொல்லவில்லை, குறைந்த பட்சம் தமிழை ஒரு மொழி பாடமாகவாவது கற்றுகொடுக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

இப்படி இறந்து கொண்டிருக்கும் தமிழை பேசி படித்து வாழ வைக்க நினைப்பது மரணபடுக்கையில் இருக்கும் ஒருவரின் வாயில் தண்ணீரை ஊற்றி பிழைக்க வைக்க முயற்சிப்பதை போன்றதாகும். எனக்கு தெரிந்து தமிழை பிழைக்க வைப்பதை விட எப்படி நாம் அதை செழித்து வாழ வைக்க போகிறோம் என்பதில் தான் நமது கவனம் இருக்க வேண்டும். அதில் தான் நமது வெற்றி இருக்கிறது.

மாறாக, தார் பூசுவதிலும், வள்ளுவனின் சிலை வைப்பதிலும்,செம்மொழி மாநாடுகள் நடத்துவதிலும் பயன் இல்லை. பாரதி கூறிய "போலி சுதேசிகள்" போன்று "போலி மொழி பற்றாளர்களாக" மேடைகளிலே மட்டும் தமிழ், தமிழ் என பேசுவதற்காக சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மற்றவரை குறை சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

அந்த பாரதியே ஆங்கில கவிஞன் செ(ஷெ)ல்லியின் பரம விசிறி என்பதையும் நாம் நினைக்க வேண்டும்.கண்மூடித்தனமாக சமுதாய கட்டாயங்களை மனதில் கொள்ளாமல் பிறரின் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள்.

முடிவில், தமிழ் கண் போன்றது, ஆங்கிலம் கண்ணாடி போன்றது. சில நேரங்களில் கண்ணாடியும் அணிய வேண்டி இருக்கிறது. அதற்காக கண்ணாடியையே கண்ணாக என்னும் மூடமையும் அனுமதிக்காமல் இருப்போம்.

தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம்.

நன்றிகள்.