Friday, 22 February 2013

தமிழில் கட்டுக்குலையாத கட்டமைப்பு.........!

தமிழில் ஒரு கட்டமைப்பு இருக்கிறது. எந்த மொழிக்கும் ஒரு வடிவமைப்பு இருக்கும். ஆயினும் தமிழில் கட்டுக்குலையாத கட்டமைப்பு - காரண காரியத்தோடு கூடிய கட்டமைப்பு இருக்கிறது. தமிழில் ஒரு சொல் உண்டு "கட்டழகி'. கட்டழகி என்பது பேச்சு வழக்குத்தான் என்றாலும், அதிலுள்ள நுட்பம் உணரத்தக்கது.

சிவப்பாக இருந்தால் போதுமா? உடல் திடமாக அமைந்து,

அவ்வவ்வுறுப்புகள் எந்த அளவினவாக இருக்க வேண்டுமோ அந்த அளவிலமைந்து முழுமையிலும் அழகுடைமையை "ஏர்', "எழில்', "சாயல்', "வனப்பு' என்ற நான்கு சொற்களால் தமிழர்கள் குறித்தனர். அவை இலக்கியச் சொற்கள். மிக நுட்பமான பொருள் வேறுபாடு உடையவை என்பதை உரையாசிரியர்கள் விளக்கத்திலிருந்து அறியலாம்.

÷ஏர் - "தளிரின்கண் தோன்றுவதோர் பொலிவுபோல, எல்லா உறுப்பினும் ஒப்பக் கிடந்து, கண்டார்க்கு இன்பத்தைத் தருவதோர் நிற வேறுபாடு. இது எல்லா வண்ணத்திற்கும் பொது'. இளம்பூரணர் கூறும் இவ்விளக்கங்கள் மிகவும் கூர்ந்து சிந்திக்கத்தக்கன. புது மணமக்களிடம் - அல்லது வறுமையில் உழன்று பிறகு புதுப்பணக்காரர் ஆனவரிடம் - தளதளவென்று, அவர் தம் இயல்பான நிறத்திலேயே ஓர் ஒளி தோன்றி, களையான முகத்துடன் காட்சியளிப்பதைப் பார்த்திருக்கலாம். தளிரும் பயிரும் பூரித்துவரும்போது தோன்றும் பொலிவு போன்ற ஓர் ஒளிவண்ணம் அது.

எழில் - அழகு. "அது மிக்கும் குறைந்தும் நீடியும் குறுகியும் உயர்ந்தும் மெலிதாகியும் வலிதாகியும் உள்ள உறுப்புகள் அவ்வளவிற் குறையாமல் அமைந்தவழி வருவதோர் அழகு. இவ் அழகினைப் பிரித்துச் சுட்டிக் காட்டல் இயலாது'. உறுப்புகள் அனைத்தும் அளவாக அமைவதால் ஏற்படும் மொத்த அழகையே "எழில்' என்றனர். அவை காண்பார்க்கு எழுச்சி தரும் அழகாகும். "அவள் எழிலுடையாள்' என்றால், காண்பதற்கு இனிமையுடையவள் என்பது பொருள். ஏர் முதலிய இவை அனைத்தும் முழுமையில் தோன்றும் அழகு பற்றியன.

சாயல் என்பது "மென்மை'. அது மயிலும் குயிலும் போல்வதோர் தன்மை. "மயில் போன்ற சாயலுடையாள்' என வருணிப்பதுண்டு. அதுவும் ஒரு முழுமையழகு. இச்சாயலழகை "ஐம்பொறிகளால் நுகரப்படும் மென்மை' என்று நச்சினார்க்கினியர் கூறுவார். உறுப்பு நலனிலும் சாயலழால் மட்டுமே மனங்கவர்வார் பலர். எனவே இவை சிறு வேறுபாடுடையன.

வனப்பு என்பதற்கு பேராசிரியர் "உறுப்புகள் அனைத்தும் திரண்டவழிப் பெறுவதோர் அழகு' என விளக்கம் தந்தார். சிலை, சிற்பம் முதலியனபோல மனங்கவரும் ஆளுமையைத் தருவதே வனப்பாகும். சிலர் எழிலுடையவராக இருப்பர். அவர்கள் உறுப்புகளின் வழி அமைந்த அழகுடையவர்; உறுப்புகளை மறந்துவிட்டு அதற்கப்பால், அவற்றின் கட்டமைப்பால் பெறுகிற அழகே வனப்பாகும். தமிழ்மொழியில் ஏர், எழில், சாயல், வனப்பு - எனும் நான்கு வகைப் பெயர்களும் ஒத்துவருமாறு சொற்களும் தொடர்களும் உள்ளன.

இதனை ஒவ்வொரு சொல்லை வைத்தும், தொடரைவைத்தும் நூற்றுக்கணக்கில் விளக்கலாம். எம்மொழிக்கும் இல்லாத "செவ்வியல் அழகுகள்' தமிழுக்கு உண்டு.

தமிழில் மகளிரை வடிவு, வடிவுக்கரசி எனப் பெயரிட்டு அழைப்பர். இந்த வடிவம்மையை, வடிவம்மாளை, வடிவாம்பாள் எனச் சிறிது மாற்றிவிட்டால், பிராமணருக்கு ஒரு மகிழ்ச்சி. தமிழ்மொழி வடிவமைப்புடையது; தமிழன்னை சொற்களின் கட்டமைப்பில், ஒரு வடிவுக்கரசியே. அம்பாளும் நம் அம்மையிலிருந்து வந்தவள்.

கட்டமைப்பும் ஓர் அழகு: "கட்டழகு' என்பது இத்தகைய வனப்பேயாகும். தமிழின் கட்டமைப்பு அழகானது. எளிமை நோக்கியது. பிற மொழிகள் பலவற்றினின்றும் வேறுபட்டது. சமஸ்கிருதத்தில் சந்த இனிமை அதன் பலவகை நீர்மைகளில் தலைமையானது. வருக்க எழுத்துக்களில் உச்சரிப்புக் கடினம். அதுவே அதற்கமைந்த தனித் தன்மையாகத் திகழ்கிறது. ஏற்ற இறக்கத்தோடு, உச்சரிப்புப் பிசகாமல் கூறப்படும் வடமொழிச் சுலோகங்களைத் தமிழில் எழுதி உச்சரிப்பது இருமொழிக்கும் கேடு; வட மொழிக்கே பெருங்கேடு.

ஆங்கிலம் நெளிவு சுளிவுமிக்க உரையாடலுக்கு ஏற்ற எவ்விதக் கருத்தையும் கூர்மையாகவும் திட்ப நுட்பத்தோடும் வெளிப்படுத்தவல்ல - கருத்துத் தொடர்பு மொழியாகிவிட்டது.

 தமிழ் கட்டமைப்புள்ள மொழி. அதன் "சாயல்' அழகு மிகமிக மென்மையானது. "கன்னித்தமிழ்' ஆதலாலேதான் தமிழுக்குக் "காப்பு'ணர்ச்சியும் தேவைப்படுகிறது.

தமிழச்சாதி: பொதுவாக மொழிகள் பல உறுப்புகளை விட்டுவிட்டு வரவரக் குறைந்து போகும் இயல்பினால் எளிமைப்படுவன. தமிழ் கூடுதலாக உறுப்புகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் எளிமை நோக்குவதே பெரும்பான்மையாகும். யார் என்பதிலிருந்து வரும் யார்க்கும் என்பதை "யாருக்கும்' என்று கூறுவதிலேதான் எளிமை தோன்றுகிறது.

"பார்'(பூமி) என்பதிலிருந்து, "பாருக்குள்ளே' என்றால் போதாதா? "பாருக்குள்ளே நல்ல நாடு' என்பதே நம் மரபாகும். "புளியம் பழம்' எனக் கூடுதலாக "அம்' சாரியை சேர்ப்பதிலே ஒரு தனி இன்பம்.

தமிழ்ச் சாதியை "விதியே விதியே தமிழச் சாதியை, என்செய நினைத்தனை?' என்று பாரதியார் பாடுவதுபோல், ஓர் அகரம் இடையிலே சேர்த்துத் "தமிழச்சாதி' என்றால்தான் நம் மனம் மகிழ்கிறது.

கட்டிடக் கலையும் கட்டமைப்பு மொழியும்: சிறு குழந்தைகளிடம் கட்டிடக் கலை விளையாட்டுக் கருவிப் பெட்டி ஒன்றைத் தந்து பாருங்கள். அதிலுள்ள பலவித அட்டைகளை வண்ண வண்ணமான சிறுசிறு கட்டைகளை, அவர்கள் அடுக்கி அடுக்கி, மாட மாளிகைபோல், கூட கோபுரம் போல் கட்டி அழித்து, மறுபடி வேறுவிதமாகக் கட்டி இவ்வாறு மகிழ்வர். இந்தக் கட்டிட விளையாட்டு அடுக்குகள்போல் தமிழின் சொற்களும் தன் உறுப்புகளும் விளங்குகின்றன.

அறிஞன், கலைஞன், கொடைஞன், வறிஞன், பகைஞன் இவ்வாறு "ஞ்' என்ற பெயரிடை நிலையுள்ள சொற்கள் நூற்றுக்கணக்காகும். பகுதி எனப்படும் முதனிலை மாற்றத்தால் மட்டும் இவை வெவ்வேறு சொற்களாக அமைகின்றன.

தமிழ்ச் சொற்கள் உருவாகும் நெறிமுறைகள்: "பார்க்கிறான், கேட்கிறான், போகிறான், படிக்கிறான், அழுகிறான், தொழுகிறான், எழுகிறான்' - இவற்றில் இடையில் வரும் ஒரே மாதிரியான "கிறு' என்ற இடைநிலையால் இவை ஒரு தன்மைப்படுகின்றன. பார்க்கின்றான், கேட்கின்றான், போகின்றான் என இவை அனைத்தையும் மாற்றினால் "கின்று' இடைநிலை எதிரொலிக்கும்.

பார்க்கின்றனன், கேட்கின்றனன், போகின்றனன் என இவற்றை மேலும் மாற்றினால் "கின்று' இடைநிலையுடன் "அன்' சாரியை ஒலியும் சேர்ந்திசைக்கும். பார்த்துக் கொண்டான், அறிந்து கொண்டான் போல்வனவற்றில் "கொள் - கொண்டான்' என்ற துணைவினைப் பயன்பாட்டால் அவை ஒரு தன்மைப்படுவதைச் சுட்டிக் காட்டலாம்.

பார்த்தேன், பார்க்கிறேன், பார்ப்பேன், பார்த்தல், பார்வை, பார், பார்த்து, இவ்வாறு "பார்' என்ற அடிச்சொல்லுடன் வெவ்வேறு உறுப்புகளைச் சொல் சிதைவு இல்லாமல் பிரித்து எடுக்கலாம். அவற்றின் பெயரையும் பயன்பாட்டையும் காரண-காரியத்தோடு விளக்கலாம். பொருளும் இலக்கணமும் விளங்கும்படி சொன்னால் பிள்ளைகள் மனத்தில் பதியும். 
நன்றிகள்.