Thursday, 21 February 2013

சர்வதேச தாய்மொழித் தினம்...!

மாசி மாதம் (பெப்ரவரி) 21 சர்வதேச தாய்மொழித் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரிய போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக மாசி மாதம் 21 சர்வதேச அளவில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், சர்வதேச அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகளின் யுனெசுகோ அமைப்பு மாசி மாதம் 21,1999 ஆம் ஆண்டு சர்வதேச தாய் மொழித்தினமாக பிரகடனப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு முதல் இத்தினம் உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழித்தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த தினத்தில், உலகில் உள்ள 6000-7000 வரையான மொழிகளுள் ஒன்றாக உள்ள தமிழ்மொழியினைப் பேசிவரும் நாம், தமிழ் மொழியை இன்றைய சர்வதேச ரீதியான சவால்களுக்கு மத்தியில் எத்தகைய நோக்கில் முன் கொண்டு செல்லப்போகின்றோம் என்பது, ஆக்கபூர்வமான உரையாடலுக்குரிய விடயமாக அமைகின்றது. 

கடந்த நான்கு வருடங்களாக சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடிவரும் மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக் குழுவினராகிய நாம் இன்றைய சூழலில் தமிழ் மொழி பற்றிய எமது கருத்துகளை ஆக்கபூர்வமான உரையாடலுகளுக்காகப் பகிர்ந்து கொள்ள முனைகின்றோம். 

இன்று உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் தாம் வாழும் நாடுகளின் சுதேச மொழிகளில் தமது இரண்டாவது தலைமுறையினரைப் பரிச்சயப்படுத்தி வரும் நிலையில்; இவ்விதம் உலகின் வித்தியாசமான மொழிகளின் ஆளுமைகளுடன் வளரும் தலைமுறையினருக்கான தொடர்பு மொழியாகத் தமிழை, உலகத்தமிழருக்கான இணைப்பு ஊடகமாக நாம் பயன்படுத்துவது ஆக்கபூர்வமான முன்னெடுப்பாக இருக்கும். 

இதனைச் சாத்தியமாக்குவதற்குரிய வகையிலேயே இன்றைய தகவல் தொழில்நுட்ப வலையமைப்பு "தமிழ் இணையம்" அமைந்துள்ளது. கணினித் தமிழுக்கூடாக உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் தொடர்ந்து தமிழர்களாக வாழ்வதற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்கிட முடியும். 

இத்தகைய செயற்பாடுகள் ஊடாக இதுவரை ஆங்கிலமூடாக மட்டும் ஒரு பரிமாணத்தில் தரிசித்து வந்த உலகப்பார்வையினை நாம் பலபரிமாணத்தில் தரிசித்திட முடியும். அதாவது நேரடியாக யே (ஜே)ர்மன் மொழியிலிருந்தும், பிரான்சிய மொழியிலிருந்தும், டச்சு மொழியிலிருந்தும்,நோர்வேய மொழியிலிருந்தும், மேலைத்தேச மொழிகளில் இருந்தும் தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் வரும்போது உலகம் பற்றிய பல பரிமாணங்களையும் நாம் தரிசிக்க முடியும். 

இதே போல் தமிழில் உள்ளதை உலகம் முழுவதும் பரவலாக்கவும் முடியும். இதனூடாக பலபரிமானங்களில் உலகப் பார்வையை வழங்கும் மொழியாகவும், உலகம் முழுவதும் பரவலாக்கிய மொழியாகவும் தமிழ் செழுமை அடையும் என்பது எமது எதிர்பார்ப்பு. 

இன்று சுதேசிய மொழிகள் அனைத்தும் தாய்மொழிகள் என்றே அழைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் இந்த மொழிகள் அனைத்தும் ஆண்களின் மொழியாகவே அமைந்திருக்கின்றன. 

உதாரணத்திற்கு எமது தமிழ்மொழியினை எடுத்துக் கொண்டால், இம் மொழியில் கோபத்தினை, வெறுப்பினை வெளிக்காட்டுவதற்கான சொற்களாக பெண்களின் பாலுறுப்புக்களோடு தொடர்புபட்ட சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருவதனைக் காணலாம். 

இத்துடன், சாதியடிப்படையில் ஒடுக்குமுறைகளுக்குள்ளாகும் சமூகங்களின் சாதிப் பெயர்களும் தமிழில் கோபம் வெறுப்புக்கான மொழிகளாக அமைந்திருக்கின்றன. 

இதே போல ஆணாதிக்க அதிகார ஒடுக்குமுறைச்சிந்தனைகளை மொழியூடாகக் கட்டமைத்துள்ள நிலையினைக்களைந்து. ஆணுக்கும் பெண்ணுக்கும் அனைத்து மனிதர்களுக்கும் உரிய சமத்துவத்தை வழங்கும் ஆக்கபூர்வமான மொழியாகத் தமிழை மீளமைத்துக் கொள்ளுதலே ஆக்கபூர்வமான தமிழ்மொழியின் நிலைப்பிற்குச் செய்யும் பணியாக அமையும்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்ற வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்! - மாகவி பாரதியார்
நன்றிகள்.