Monday 11 February 2013

பறவைகளின் வெப்பத்தை பரப்புவது.......!

வெயில் காலத்தில் சுற்றுப்புற வெப்பம் அதிகரிக்கும்போது மனிதர்களுக்கு வியர்க்கிறது. உடல் வெப்பத்தை வியர்வை எடுத்துக்கொண்டு ஆவியாவதால் உடல் சூடாகாமல் பாதுகாக்கப்படுகிறது. மனிதர்களுக்கு வியர்வை ஒரு பாதுகாப்பு அமைப்பு. ஆனால், பறவைகளுக்கு வியர்ப்பதில்லை.


சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு உடல்வெப்பநிலையை மாற்றியமைத்துக் கொள்ள அவைகளின் அலகுகள் உதவுவதாக அவுசுத்திரேலியா, கனடா நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

இதன்மூலம் பறவைகளின் பரிணாம வளர்ச்சி சுற்றுப்புற வெப்பநிலையை சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இந்த முடிவு எட்டப்படுவதற்கு முன்பாக உலகெங்கும் காணப்படும் பல்வேறு வகையான பறவைகளின் அலகுகள் ஆராயப்பட்டன. 

வெப்பச்சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளமாகவும், குளிர்சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் குட்டையாகவும் காணப்படுகின்றன. பறவை அலகுகளின் அமைப்பு, தோற்றம் இவையெல்லாம்  உணவைப்பெறுவதற் காகவும், எதிர்பாலினத்தை ஈர்ப்பதற்காகவும் மட்டுமே என்கிற பழைமையான கருத்து இப்போது மெருகூட்டப்பட்டுள்ளது.

பறவைகளுக்கு ஒரு ‘வெப்பத்தை பரப்பு’வதற்காக அவற்றின் அலகுகள் செயல்படுகின்றன என்கிற புதிய உண்மை வெளிப்பட்டுள்ளது. 

214 பறவையினங்கள் அவை வாழும் அட்ச, தீர்க்க ரேகை கோடுகளின் அடிப்படையில் பகுக்கப்பட்டன. அவை வாழும் வெப்பதட்ப நிலைக்கேற்ப அலகுகளின் நீளம் அமைந்திருந்தது. குளிர்ச்சியான சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளம் குறைவாக இருந்தன. 

சுருக்கமாகச் சொல்லப்போனால், பறவைகளின் அலகுகள் ஒரு வெப்பத்தை பரப்புவது போன்று செயல்படுவதும், வெப்பத்தை பரப்புவது (Radiator) தேவையில்லாத பறவைகளின் அலகுகள் நீளம் குறைந்து இருப்பதும் கண்டறியப்பட்டது.
நன்றிகள்.