Tuesday 12 February 2013

தமிழ் வளருமா பிறமொழி துணையின்றி....?


கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் தமிழில் இருந்து பிறமொழிச் சொற்கள் பேரளவில் நீக்கப்பட்டுவிட்டன. தமிழைத் தூயதமிழாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முயற்சி பெருமளவில் நடைபெற்று வருகின்றது. மனநிறைவளிக்கும் வகையில் வெற்றியும் கிடைத்திருக்கின்றது.

நல்லதமிழ் வளர்ச்சியில் சில செய்தி இதழ்கள், நூலாசிரியர்கள், தமிழ் தொலைக்காட்சி போன்ற மின்னியல் ஊடகங்கள், கணினித் துறையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் மிக ஆர்வத்தோடு பங்காற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் தமிழறிஞர் மணவை முசு (ஸ்) த்தாப்பா உருவாக்கியுள்ள 6 இலக்க (இலட்சம்) தமிழ்க் கலைச்சொற்கள் நல்லதமிழாக உள்ளன. சொல்லாய்வு அறிஞர் ப.அருளி தலைமையில் 135 அறிவியல் துறைகளுக்காக உருவாகியுள்ள அருங்கலைச்சொல் பேரகரமுதலி பிறமொழிக் கலப்பின்றி வெளிவந்துள்ளது.

தமிழ்க் கணினி இணைய வல்லுநர்கள் வியத்தகு வகையில் புதுப்புது கலைச்சொற்களை உருவாக்கியும் பயன்படுத்தியும் வருகின்றனர். தமிழ்நாட்டைக் காட்டிலும் மலேசியாவில் நாம் பயன்படுத்தும் தமிழ் மிகக் தூய்மையாக உள்ளது.

அன்னிய மொழி கலக்காமல் தமிழ் வெற்றிபெற்று வருவதற்கு இப்படிப்பட்ட ஆக்கப்பணிகள் பலவற்றைச் சான்றுகளாகக் குறிப்பிடலாம்.

தமிழ் தமிழாக இருக்க பிறமொழி எழுத்துகளையும் சொற்களையும் அறவே நீக்கிவிட வேண்டும். பிறமொழிச் சொல்லைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய இக்கட்டு நேர்ந்தாலோ அல்லது மொழிபெயர்க்க இயலாமல் போனாலோ தமிழ் மரபுக்கு ஏற்ப திரித்து எழுத வேண்டும்.

சொல்லுக்கு முதலில் வராத எழுத்துகளை எழுத நேர்ந்தால் முதலெழுத்து மாற்றப்பட வேண்டும். ஏற்கனவே தமிழில் இருக்கும் சொற்களையே பயன்படுத்த வேண்டும். மாறாக, வலிந்து பிறமொழிச் சொற்களைத் திணிக்கக் கூடாது. இவ்வாறு சில எளிய வழிகளைப் பேணிவந்தால் தமிழ் தமிழாகவே இருக்கும்.

முடிந்த முடிபு

மற்றைய மொழிகளைப் போல் தமிழ் பயனீட்டாளர் மொழியன்று. பயனீட்டாளர் மொழிதான் பிறமொழிகளிலிருந்து கடன்பெற்று பிழைக்க வேண்டும். ஆனால், தமிழோ உற்பத்தி மொழி. எந்தச் சூழலிலும் புதுப்புது சொற்களைப் புனைவதற்கு ஏற்ற மொழி.

எனவே, கிரந்தம், சமற்கிருதம், பிராகிருதம், மணிப்பிரவாளம் மட்டுமல்ல ஆங்கிலம் முதலான வேறு எந்தவொரு மொழியின் தயவும் துணையும் தமிழுக்குத் தேவையே இல்லை.

தமிழ் தமிழாக இருப்பதற்கு தமிழர்கள் தமிழராக இருந்து உரிய பணிகளை முன்னெடுப்பதே முக்கியம்.
நன்றிகள்.