Tuesday 12 February 2013

ஒரு, ஓர்; இரு, ஈர் என்னும்.............!

ஒரு, ஓர்; இரு, ஈர் என்னும் அமைப்பினைப் போல பெரிய, பேர் என்னும் சொல்லமைப்பு உண்டு.


உயிர் எழுத்துக்கு முன் 'பேர்' வரும்; உயிர்மெய் எழுத்துக்கு முன் 'பெரிய' வரும்.

பேர் + அவை= பேரவை

வேறு சில உதாரணங்கள் : பேரணி, பேராசிரியர், பேராறு, பேராழி, பேராசை, பேரியக்கம், பேரிரைச்சல், பேரீச்சம் பழம், பேருலகம், பேருந்து, பேருலை, பேரூராட்சி, பேரூக்கம்.

'பெரிய' உதாரணங்கள் : பெரிய மலை, பெரிய காடு, பெரிய தாடி, பெரிய நாடு, பெரிய பாலம், பெரிய வாகனம்.

'இயக்குநர்', 'இயக்குனர்' என்று சிலர் இப்படியும் சிலர் அப்படியும் எழுதுகின்றார்களே- எது சரி?

நீங்கள் தனிச் சொல்லைப்பற்றிக் கேட்கத் தொடங்கி விட்டீர்கள், சரி. எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் இத்துடன் நிறுத்தி, தனிச்சொற்களில் கவனம் செலுத்துவோம்.

ஆங்காங்கே தேவையான இடங்களில் தேவையான இலக்கணங்களை மீண்டும் நினைவுகொள்வோம்.

'இயக்குநர்' என்பதே சரி, 'இயக்கு' என்னும் வினைச்சொல்லைப் பெயர்ச்சொல் ஆக்குவதற்கு 'நர்’ விகுதி சேர்க்க வேண்டும்.

ஓட்டு=ஓட்டுநர், ஆளு(ள்+உ)+நர்= ஆளுநர், பெறு+நர்=பெறுநர்,

அனுப்புநர்= அனுப்பு+நர்,பயிற்று+நர்=பயிற்றுநர், வல்லு(ல்+உ)+நர்=வல்லுநர்.

வந்தனர், ஆடினர், பாடினர்,அழைத்தனர் ஆகிய சொற்களில் வரும் 'ன' பன்மையைக் குறிக்கும்.

அஃறிணையாக இருந்தால் வந்தன, ஆடின, பாடின,அழைத்தன என வரும். இங்கே 'ஆடிநர்', 'ஆடிந' என்று எழுதுவது தவறு.

அணுகுண்டா-அணுக்குண்டா- எது சரி?

அணுவினால் ஆகிய குண்டு என்பதால் அணுக்குண்டே சரி; ஒற்றெழுத்து மிகுக்க வேண்டும்.

தங்கக் காசு - தங்கத்தினால் ஆகிய காசு

வெள்ளிக்கொலுசு - வெள்ளியால் ஆகிய கொலுசு

வேறு சில உதாரணங்கள் :

இரும்பு வாளி - இரும்பினால் ஆகிய வாளி

தோல் செருப்பு - தோலால் ஆகிய செருப்பு

இவை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.

தொகை என்றால் என்ன?

இது மக்கள் தொகையுமன்று; பணத்தொகையும் அன்று.

தொகை என்றால் மறைதல், தொகுதல், தொக்கி நிற்றல் என்று பொருள்.

எது மறைதல்?

வேற்றுமை உருபுகள் மறைதல்!

வேற்றுமை என்றால் என்ன?

பொருளை (அர்த்தத்ததை) வேறு படுத்துதல் என்று பொருள்.

1. காவலர் அடித்தார்

2..காவலர் ஐ அடித்தனர்

இந்த இரண்டு சொற்றொடர்களும் வேறு வேறு பொருளைத் தருகின்றன.

'ஐ’ என்னும் உருபைச் சேர்த்தால் பொருள் மாற்றம் உண்டாகிறது.

பொருள் வேற்றுமையை உண்டாக்கும் உருபுகளுக்கு வேற்றுமை உருபுகள் என்று பெயர்.

அவை, ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகும். இவை முறையே 2,3,4,5,6,7- ஆம் வேற்றுமை உருபுகள்.

இந்த உருபுகள் வெளிப்பட்டும் வரலாம்; மறைந்தும் வரலாம்.

கற்சிலை என்றால் தொகை; கல்லால் செய்யப்பட்ட சிலை என்றால் விரிவு.

உருபும் பயனும் உடன்தொக்க தொகை என்று சொன்னீர்களே?

ஆம். வேற்றுமை உருபும் அதன் பயனும் சேர்ந்து மறைந்துவிட்டால் 'உடன் தொக்க தொகை' என்று பெயர். அதாவது கல்லால் ஆகிய சிலை என்பதில் ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும், அதன் பயன் 'ஆகிய' மறைந்து 'கற்சிலை' என்று நின்றது.

இப்போது ஒரு புதிய சொல் வந்திருக்கிறதே மடிக்கணினி என்று- அது மடிக்கணினியா-மடிகணினியா?

இரண்டும் சரிதாம்; ஆனால், வேறு வேறு பொருள். மடியின் கண் ( மீது ) வைத்துப் பார்த்தால் ஒற்றெழுத்து மிகுக்க வேண்டும் (மடிக்கணினி).

ஒற்றெழுத்தினை மிகுக்காமல் எழுதினால் மடிக்கப்படும் கணினி என்று பொருள். உங்களுக்கு எந்தக் கணினி வேண்டும்?

மடித்த, மடிக்கிற, மடிக்கும் கணினி என்று வினைத் தொகையாகவும் கருதலாம்.

மடிக்கணினி = மடியின் கண் வைத்துப் பார்க்கப்படும் கணினி

மடிகணினி = மடித்த, மடிக்கிற மடிக்கும் கணினி

முன்னது ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; பின்னது வினைத்தொகை.

வினைத்தொகை என்றால் என்ன?

காலம் காட்டும் இடைநிலைகள் விகுதிகள் மறைந்து வந்தால் வினைத்தொகை என்று பெயர்.

வினை மறைகிறதா, காலம் மறைகிறதா?

வினைச் சொல்லின் முக்கியத் தொழில் காலம் காட்டுதல், காலம் மறைவதால், அதே வேளை முக்காலத்துக்கும் பொருந்துவதால் வினைத் தொகை.

மடித்த, மடிக்கிற, மடிக்கும் என்பன மடி (த, கிற, உம் என்பன மறைந்து) என நின்று முக்காலத்துக்கும் பொருந்தி நடக்கும். இந்த அமைப்புத் தமிழ் மொழியில் ஒரு திறமையான, சுவையான, சிறப்பான பகுதி.

வினைத்தொகை என்பது மொழியைச் சுருக்கிப் பேசவும் எழுதவும் அமைந்த நுணுக்கமான அமைப்பு. பின்வரும் சொல்லாட்சிகளைக் கூர்மையாக நோக்குங்கள்.

திருவளர்செல்வி, திருவளர்செல்வன், திருநிறைசெல்வி, திருநிறைசெல்வன்,

நிறைகுடம், வளர்பிறை, தேய்பிறை, பழமுதிர்சோலை (பழம்+உதிர்சோலை), தொடர் சொற்பொழிவு,

எரிவாயு, விடுகதை, குடிதண்ணீர், சுடுகாடு, ஊறுகாய், ஏவுகணை, தாவுகுரங்கு, ஆடுஅரங்கு, ஓடுதளம்,

குறைதீர்கூட்டம், ஏற்றுகாதை, கடிநாய், வெடிகுண்டு, வெட்டுஅரிவாள், கொல்யானை.

மிக மிக முக்கியமான செய்தி : இவற்றில் ஒற்றெழுத்துக்கள் மிகா.

இவை ஒவ்வொன்றும் முக்காலத்துக்கும் பொருந்தும். வளர்ந்த, வளர்கின்ற,வளரும் செல்வி=இதே போன்று மற்றவற்றிற்கும் எண்ணுக.

கட்டடமா,கட்டிடமா-எது சரி?

அறிஞர்கள் பலர் பல ஆண்டுகளாகத் தமிழகத்தைத் திருத்திவரும் செய்தி இது; ஆனால் திருந்தியபாடில்லை!

கட்டடம் (BUILDING) சரி; கட்டு+இடம் = கட்டிடம்.. அதாவது, கட்டுவதற்கு உரிய இடம்.

உங்களுக்கு கட்டுவதற்கு உரிய இடம் வேண்டுமா?கட்டடம் வேண்டுமா?

தேநீரா- தேனீரா - எது சரி?

இரண்டும் சரிதாம்; பொருள் தான் வேறு!

தே+நீர் = தேநீர் (தேயிலையின் சுருக்கம் தே); தேன்+நீர் = தேனீர் (தேன் கலநத நீர்)! உங்களுக்கு எந்நீர் வேண்டும்?
நன்றிகள்.