Sunday 3 February 2013

தமிழ் சொல் இலக்கணம்......!

சொல் இலக்கணம்


ஆ (பசு), வீடு, வண்டு - இங்ஙனம் ஓர் எழுத்துத் தனித்தோ, இரண்டு முதலிய எழுத்துக்கள் தொடர்ந்தோ ஒரு பொருளைத் தெரிவிப்பது சொல் எனப்படும். 
(1) ஆ, வீடு, வண்டு - இவற்றுள் ஒவ்வொன்றும் ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்லாதலால் பெயர்ச் சொல் எனப்படும். 
(2) கண்டான், கண்டு, கண்ட - இவ்வாறு ஒன்றன் வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். 

1. திணை

உலகத்து உயிர்களுள் விலங்கு, பறவை, நீர்வாழ்வன,  ஊர்வன   என்றும்  உயிர்களைவிட மனிதன் பேராற்றல் படைத்தவனாக இருக்கின்றான்.

எனவே, மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாகின்றான். இவ்வாறே நம் கண்ணுக்குத் தெரியாத தேவரும் நரகரும் உயர்ந்தவர் என்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். இப்பிரிப்பு இன்றளவும் இலக்கணத்தில் கூறப்படுகிறது. 

மக்கள், தேவர், நரகர் - உயர்திணை.
பிற உயிர் உள்ளனவும் இல்லனவும் - அஃறிணை.

2. பால்

பால் - பிரிவு:

கண்ணன், பாண்டியன், பையன் - ஆண்பால்.
கண்ணகி, அரசி, பெண் - பெண்பால்.
அரசர்கள், மக்கள், பெண்கள் - பலர்பால்.
இம்மூன்று பால்களும் உயர்திணையைச் சேர்ந்தவை.

பசு, கிளி, பாம்பு, தவளை, மலை, மரம் - ஒன்றன் பால்.
பசுக்கள், கிளிகள், பாம்புகள், தவளைகள், மலைகள், மரங்கள் - பலவின்பால்.
இவை இரண்டும் அஃறிணைக்கு உரிவை.

3. எண்

எண் - பொருள்களின் எண்ணிக்கை.
ஒன்றைக் குறிப்பது ஒருமை: ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.

கந்தன், கற்பகம், மாடு - ஒருமை எண்.
பெண்கள், பிள்ளைகள், மாடுகள் - பன்மை எண்.
நான், நீ, அவன், அவள், அது - ஒருமை எண்.
நாம், நீர், அவர்கள், அவை - பன்மை எண்.

4. இடம்

நான் நேற்று ஆசிரியரைப் பற்றிச் சொன்னபோது நீ மகிழ்ச்சி அடைந்தாய் - இந்த வாக்கியத்தில்,

நான் என்பது பேசுவோனைக் குறிக்கின்றது.
நீ என்பது முன்னின்று கேட்பவனைக் குறிக்கின்றது.
ஆசிரியரை என்பது பேசப்படுபவரைக் குறிக்கின்றது.
இம்மூவர் இடங்களும் முறையே

(1) தன்மை இடம்
(2) முன்னிலை இடம்
(3) படர்க்கை இடம் என்று பெயர் பெறும்.

(1) நான் - தன்மையிடம்.
(2) நீ - முன்னிலையிடம்.
(3) ஆசிரியர் - படர்க்கையிடம்.

நான் - தன்மை ஒருமை.
நாம், நாங்கள் - தன்மைப் பன்மை.
நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலைப் பன்மை.
அவன், அவள், அது - படர்க்கை ஒருமை.
அவர்கள், அவை - படர்க்கைப் பன்மை.
நான், யான் - தன்மை ஒருமை.
நாம், யாம், நாங்கள் - தன்மை பன்மை.
நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலை பன்மை.
தான் - படர்க்கை ஒருமை.
தாம் - படர்க்கை பன்மை.

நான் சொல்லுவது தனக்குத் தெரியும்.
தான் சொன்னதைக் கேட்டீர்களா?
தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்களுக்குப் பதிலாக அவன், அவள், அவர் 
என வழங்குதலே இன்றுள்ள பெரு வழக்காகும். 

5. வேற்றுமை

கண்ணன் - இஃது ஒரு பெயர்ச்சொல். இச்சொல் கண்ணனை (ஐ), கண்ணனால் (ஆல்), கண்ணனுக்கு (கு), கண்ணனில் (இல்), கண்ணனது (அது), கண்ணனிடம் (இடம்), கண்ணா! வருக - எனப் பலவாறு பொருளில் வேறுபட்டு வருதலைக் காணலாம். இவ்வேறுபாடு வேற்றுமை எனப்படும். இவ்வேற்றுமைகளை உண்டாக்கும் ஐ முதலிய உருபுகள் வேற்றுமை உருபுகள் எனப்படும். 

வேற்றுமை எட்டு வகைப்படும்.

கண்ணன் வந்தான் - இயல்பான பெயர்; முதல் வேற்றுமை.

கண்ணனைக் கண்டேன் - இரண்டாம் வேற்றுமை (ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு.

கண்ணனால் அழைக்கப்பட்டேன் - ஆல்
கண்ணனோடு சென்றேன் - ஓடு
கண்ணனுடன் வந்தேன் - உடன்
மூன்றாம் வேற்றுமை.
ஆல், ஓடு, உடன் - மூன்றாம் வேற்றுமை உருபுகள்.

கண்ணனுக்குத் திருமணம் - நான்காம் வேற்றுமை.
கு - நான்காம் வேற்றுமை உருபு.

கண்ணனில் கந்தன் பெரியவன் - இல்
கண்ணன் வீட்டினின்று சென்றான் - நின்று
கண்ணன் மரத்திலிருந்து இறங்கினான் - இருந்து
ஐந்தாம் வேற்றுமை உருபு.
இல், நின்று, இருந்து - ஐந்தாம் வேற்றுமை உருபுகள்.

இது கண்ணனது பை - அது
இவை கண்ணனுடைய பைகள் - உடைய - ஆறாம் வேற்றுமை.
அது, உடைய - ஆறாம் வேற்றுமை உருபுகள்.

பையில் பணம் இருக்கிறது - இல்
கண்ணனிடம் கத்தி இருக்கிறது - இடம்
வீட்டின் கண் விருந்தினர் இருக்கின்றனர் - கண்
இல், இடம், கண் - ஏழாம் வேற்றுமை உருபுகள்.

பெயர் கூறி ஒருவனை அழைத்தலே எட்டாம் வேற்றுமை எனப்படும். அழைத்தல் - விளித்தல். இது விளி வேற்றுமை என்றும் சொல்லப்படும். முதல் வேற்றுமை விளி வேற்றுமை கண்ணன் கண்ணா! - மகன் மகனே! - ஈற்றில் ஏகாரம் மிக்கது. மக்கள் மக்காள் - ஈற்றயல் நீண்டது. முருகன் முருக! - பிள்ளை பிள்ளாய் ! - ஈற்று `ஐ' - `ஆய்' எனத் திரிந்தது. 

6. ஆகு பெயர்

மயில் - ஒரு பறவையின் பெயர்.
மயில் வந்தாள் - மயில் போன்ற (சாயலையுடைய) பெண் வந்தாள். இவ்வாறு ஒன்றன் பெயர் அதனோடு தொட்புடைய வேறொரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகிவரின், அஃது ஆகுபெயர் எனப்படும். 

அவன் சிறப்பை மதுரை பாராட்டுகிறது. இங்கு `மதுரை' என்னும் இடத்தின் பெயர் அவ்விடத்திலுள்ள மக்களுக்கு ஆகி வந்தது. எனவே, `மதுரை', என்பது ஆகு பெயர். சித்திரை வந்தான் - `சித்திரை' என்னும் மாதத்தின் பெயர் அம்மாதத்தில் பிறந்த ஒருவனுக்குப் பெயராக வந்துள்ளது. எனவே, `சித்திரை' என்பதும் ஆகுபெயர். வீட்டிற்கு வெள்ளையடித்தான் - `வெள்ளை' என்னும் நிறத்தின் பெயர் அந்நிறத்தையுடைய சுண்ணாம்புக்கு ஆகி வந்தது. எனவே, `வெள்ளை' என்பதும் ஆகுபெயர். 

ஒரு `படி' வாங்கினேன் - `படி' என்னும் முகத்தலளவைப் பெயர், அந்த அளவுடைய ஒரு பொருளுக்கு ஆகி வந்தது. எனவே, `படி' என்பதும் ஆகுபெயர். 

7.தொழிற் பெயர்

வா, போ, நில், செய் - என்றாற் போல வருபவை வினை செய்ய ஏவப் பயன்படும்
சொற்களாகும். இவை வினைச் சொற்கள் எனப்படும். இவை ஏவல் வினைமுற்றுக்கள்
என்றும் சொல்லப்படும், இவற்றிலிருந்து,
வந்தான், வருகிறான், வருகிறாள், வருவார் எனவும்,
வந்து, போய், நின்று, செய்து எனவும்,
வந்த, போன, நின்ற, செய்த எனவும்,
வருதல், போதல், நிற்றல், செய்தல் எனவும் சொற்கள் பலவாறு வளர்ச்சியடையும்

இவற்றுள் முதல் மூன்று வகைப்பட்டவையும் வினைச்சொற்களாகும். வருதல், போதல், நிற்றல், செய்தல் என்பன வருதலாகிய தொழில், போதலாகிய தொழில், நிற்றலாகிய தொழில், செய்தலாகிய தொழில் எனத் தொழிலுக்குப் பெயராகி வருதலின் தொழிற் பெயர்கள் எனப்படும். 

தொழிற் பெயர் விகுதிகள்:
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, தி, சி, காடு, பாடு, மதி, து, உ, மை
முதலியன.

செய் + தல் - செய்தல். இவற்றுள் `செய்' என்பது இச்சொல் வளர்ச்சிக்கு உயிர் நாடியாய் முன் நிற்பதால் பகுதி எனப்படும். 
`தல்' என்பது சொல்லின் கடைசியில் நிற்பதால் விகுதி, எனப்படும். செய்- பகுதி; தல் தொழிற் பெயர் விகுதி, ஓடுதல், அடல், ஓட்டம், நடத்தை, வருகை, தீர்வை, போக்கு, வாய்ப்பு, மறதி, முயற்சி, சாக்காடு, மெய்ப்பாடு, ஏற்றுமதி, நடந்தது, வரவு, நடந்தமை - இவை தொழிற் பெயர்கள். 

8. வினைமுற்று முதலியன

படித்தான், படித்து, படித்த, - என்பன வினைச்சொற்கள் என்பது முன்பே கூறப்பட்டதன்றோ? இவற்றில் பொருள் முற்றி (முடிந்து) நிற்கும் வினைச்சொல் எது? படித்தான் என்பதே வினை முற்றி நிற்பது. ஆதலால் படித்தான் என்பது வினைமுற்று எனப்படும். படித்து, படித்த என்பவை முற்றுப் பெறாத வினைச் சொற்கள், இவை (1) படித்து (வந்தான்) என வேறொரு வினைச் சொல்லையும், (2) படித்த (பையன்) என ஒரு பெயர்ச் சொல்லையும் தழுவி நிற்க வேண்டுவனவாக இருக்கின்றன. இவற்றுள் வினையைத் தழுவும் முற்றுப் பெறாத வினைச்சொல் வினையெச்சம் எனப்படும். பெயரைத் தழுவும் முற்றுப் பெறாத வினைச்சொல் பெயரெச்சம் எனப்படும்.

படித்தான், படிக்கின்றான், படிப்பான் - வினைமுற்று.
படித்து, நடந்து, படிக்க (வந்தான்) - வினையெச்சம்.
படித்த, படிக்கின்ற, படிக்கும் (பையன்) - பெயரெச்சம்.
மூன்று காலங்கள்
கம்பர் இராமாயணம் பாடினார்.
பையன் பாடம் படிக்கிறான்.
குழந்தை பால் குடிக்கும்.
பாடினார், படிக்கிறான், குடிக்கும் - இவற்றுள் ஒவ்வொன்றும் எந்தக் கால
நிகழ்ச்சியை உணர்த்துகின்றது?
பாடினார் என்பது செயல் நடந்துவிட்ட (இறந்த) காலத்தையும்.
படிக்கிறான் என்பது செயல் இப்பொழுது நிகழ்கின்ற காலத்தையும்,
குடிக்கும் என்பது செயல் இனி நடைபெற இருக்கும் எதிர்காலத்தையும்
காட்டுகின்றன அல்லவா? இவை மூன்றும் முறையே,
இறந்த கால வினைமுற்று
நிகழ்கால வினைமுற்று
எதிர்கால வினைமுற்று
எனப்படும்.
பாடினார் - இறந்தகால வினைமுற்று.
படிக்கிறான் - நிகழ்கால வினைமுற்று.
குடிக்கும் - எதிர்கால வினைமுற்று.

செய்தான் - செய் + த் + ஆன்
செய்கிறான் - செய் + கிறு + ஆன்
செய்வான் - செய் + வ் + ஆன்
இம்மூன்று சொற்களும் வெவ்வேறு காலங்களை உணர்த்துகின்றன என்பதை நீங்களே உணரலாம். இங்ஙனம் தனித்தனிக் காலத்தை உணர்த்தும் உறுப்பு ஒவ்வொரு சொல்லிலும் எங்கே இருக்கிறது? மூன்றிலும் உள்ள `செய்' என்னும் முதல் உறுப்புப் பகுதி என்பதும், கடைசி உறுப்பு விகுதி என்பதும் உங்களுக்குத் தெரியும். பகுதி தொழிலை உணர்த்துகிறது; விகுதி தொழில் செய்யும் கருத்தாவை உணர்த்துகிறது; இவை இரண்டும் போக ஒவ்வொன்றிலும் எஞ்சியிருக்கும் உறுப்பே ஒவ்வொரு காலத்தை உணர்த்துகின்றது.

த் - இறந்த (செயல் நடந்த) காலத்தையும்
கிறு - நிகழ் (செயல் நிகழ்கின்ற) காலத்தையும்
வ் - எதிர் (செயல் இனி நடைபெறும்) காலத்தையும் உணர்த்துகின்றன. இவை 
இவ்வாறு சொல்லின் இடையில் நிற்பதால் இடைநிலைகள் என்று பெயர் பெறும்; இவை 
காலம் காட்டுவதால் காலம் காட்டும் இடைநிலைகள் என்று சொல்லப்படும்.

செய்தான் - செய் + த் + ஆன்
உண்டான் - உண் + ட் + ஆன்
கற்றான் - கல் + ற் + ஆன்
விரும்பினான் - விரும்பு + இன் + ஆன்.
இவை நான்கும் இறந்த காலத்தைக் குறிக்கும் வினைச்சொற்கள். ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன அல்லவா? இவை இறந்த கால இடைநிலைகள். த், ட், ற், இன் - இறந்த கால இடைநிலைகள்.

உண்கிறான் - உண் + கிறு + ஆன்
உண்கின்றான் - உண் + கின்று + ஆன்
உண்ணாநின்றான் - உண் + ஆநின்று + ஆன் 
இவை மூன்றும் நிகழ்காலத்தைக் காட்டுகின்றன ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக 
இருக்கின்றன. இவை நிகழ்கால இடைநிலைகள். 
கிறு, கின்று, ஆநின்று - நிகழ்கால இடைநிலைகள்.

உண்பான் + ப் + ஆன் 
செய்வான் - செய் + வ் + ஆன் 
இவையிரண்டும் எதிர்காலத்தை உணர்த்துகின்றன; ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன இவை எதிர்கால இடைநிலைகள். ப், வ் - எதிர்கால இடைநிலைகள்.

வினைமுற்றுக்களின் இடைநிலைகள் இருந்து காலம் காட்டுவது போலவே வினையெச்சத்திலும் பெயரெச்சத்திலும் இவ்விடைநிலைகள் நின்று காலம் காட்டும். 
உண்டு (வந்தேன்) - உண் + ட் + உ. 
செய்து - செய் + த் + உ. 
கற்று - கல் + ற் + உ. 
இவை இறந்தகால இடைநிலைகளைக் கொண்ட வினையெச்சங்கள்; ஆதலால் இவை இறந்தகால வினையெச்சங்கள் எனப்படும்.

படிக்கிற (பையன்) - படி + கிறு + அ 
மேய்கின்ற (பசு) - மேய் + கின்று + அ. 
இவை நிகழ்கால இடைநிலைகளைக் கொண்ட பெயரெச்சங்கள்; ஆதலால் இவை நிகழ்காலப் பெயரெச்சங்கள் எனப்படும்.

10. வினையாலணையும் பெயர்

1.> மதுரை மாரியப்ப சுவாமி பாடினார் - இவ்வாக்கியத்தில் `பாடினார்' என்பது வினைமுற்று. 

இவர் பாடிய மறுநாள் தெரு வழியே சென்றார். இவரைக் கண்ட மக்கள், `நேற்றுப் பாடினவர் இதோ போகிறார்' என்றனர். பாடியவரது இயற்பெயர் மாரியப்ப சுவாமி என்பது. ஆனால் மக்கள் அதைச் சொல்லாமல், `பாடினவர்' என்னும் புதிய பெயரை இட்டு வழங்கினர். இப்பெயர் இவரை இவர் செய்த வினையால் அணைந்த பெயராகும். பாடுதலாகிய வினையைச் செய்ததனால் பாடினவர்குத் தாம் செய்த வினையால் அணையும் பெயர், விணையாலணையும் பெயர் எனப்படும். வினைமுற்று வினையாலணையும் பெயர் ஓடினார் ஓடினவர் பாடுகிறான் பாடுகிறவன் செய்வான் செய்பவன் படித்தான் படித்தவன்இவ்வினையாலணையும் பெயர்கள் செய்பவன், செய்பவனை, செய்பவனால், செய்பவனுக்கு, செய்பவனில், செய்பவனது, செய்பவனிடம், செய்பவனே! என வேற்றுமை உருபுகளை ஏற்றுவரும்

2>. தொழிற் பெயர் வினையாலணையும் பெயர்: வேறுபாடுகள். தொழிற் பெயர் வினையாலணையும் பெயர் வருதல் - தொழிற்பெயர் வந்தவன் - வினையாலணையும் பெயர்

1. தொழிலுக்குப் பெயராய் வரும் 1. தொழிலைச் செய்த பொருளுக்கே பெயராய் வரும். 
2. படர்க்கை இடற்திற்கே உரியது. மூவிடத்திற்கும் உரியது. 
3. காலம் காட்டாது. 3. முக்காலத்தையும் காட்டும். வந்தானை - இறந்தகாலம் 
வருகின்றவனை - நிகழ்காலம் வருவானை - எதிர்காலம். வினையாலணையும் பெயர் முக்காலமும் காட்டும்.

11. ஐம்பாற் பெயர் விகுதிகள்

1. ஆண்பால் பெயர் விகுதி 
(1) குழையன் அன் 
(2) குழையான் ஆன் 
(3) வடமன் மன் 
(4) கோமான் மான் 
(5) பிறன் ன் 

அன், ஆன், மன், மான், ன் - ஆண்பாற் பெயர் விகுதிகள். 
2. பெண்பால் பெயர் விகுதி 
(1) குழையள் அள் 
(2) குழையாள் ஆள் 
(3) பிறள் ள் 
(4) அரசி இ

அள், ஆள், ள், இ - பெண்பால் பெயர் விகுதிகள். 
3. பலர்பால் பெயர் விகுதி 
(1) குழையர் அர் 
(2) குழையார் ஆர் 
(3) குருமார் மார் 
(4) குருமார்கள் கள் 
(5) பிறர் ர்

அர், ஆர், மார், கள், ர் - பலர்பால் பெயர் விகுதிகள்.

4. ஒன்றன் பால் பெயர் விகுதி 
அது து 
து - ஒன்றன்பால் பெயர் விகுதி 
5. பலவின்பால் பெயர் விகுதி 

(1) நல்லன அ 
(2) நல்லவை வை 
(3) நாடுகள் கள் 

அ, வை, கள் - பலவின்பால் பெயர் விகுதிகள்.

12. ஐம்பால் வினைமுற்றுக்கள்

வினைமுற்று விகுதிகள் 
1. ஆண்பால் வினைமுற்று விகுதி 
(1) நடந்தனன் அன் 
(2) நடந்தான் ஆன்

2. பெண்பால் வினைமுற்று விகுதி 
(1) நடந்தனள் அள் 
(2) நடந்தாள் ஆள் 
3. பலர்பால் 

வினைமுற்றுக்கள் விகுதி 
(1) நடந்தனர் அர் 
(2) நடந்தார் ஆர் 
(3) செல்லுப ப 
(4) பாடன்மார் மார்

4. ஒன்றன்பால் வினைமுற்று விகுதி 
(1) நடந்தது து 
(2) கூவிற்று று 
(3) பொருட்டு (பொருளையுடையது) டு

5. பலவின்பால் வினைமுற்று விகுதி 
(1) நடந்தன அ (உடன்பாடு) 
(2) நடவா ஆ (எதிர்மறை)

13. பகுபத உறுப்புகள்

செய், நில், உண், எடு - இவற்றுள் ஒவ்வொன்றும் பிரிக்கமுடியாத சொற்கள். எனவே பகாப் பதங்கள் எனப்படும். (பகுத்தல் - பிரித்தல்; பகா - பிரிக்க 
முடியாத.) 
செய்தான் = செய் + த் + ஆன் 
நின்றான் = நில் + ற் + ஆன் 
உண்கிறான் = உண் + கிறு + ஆன் 
இவ்வாறு பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும்.

பகுபதத்தில் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் உறுப்புகள் இருக்கும். 
கூனன் = கூன் + அன் 
கூன் - பகுதி 
அன் - விகுதி 

செய்தான் = செய் + த் + ஆன் 
செய் - பகுதி 
த் - இடைநிலை 
ஆன் - விகுதி

செய்தனன் = செய் + த் + அன் + அன் 
செய் - பகுதி 
த் - இடைநிலை 
அன் - சாரியை 
அன் - விகுதி

படித்தனன் = படி + த் + த் + அன் + அன் 
படி - பகுதி 
த் - சந்தி 
த் - இடைநிலை 
அன் - சாரியை 
அன் - விகுதி

நடந்தனர் = நட + த் + த் + அன் + அர் 
நட - பகுதி 
த் - சந்தி 
த் - இடைநிலை 
அன் - சாரியை 
அர் - விகுதி 
(த் - ந் ஆனது - விகாரம்)

பெற்றாள் = பெறு + ஆள் 
பெற்று + ஆள் 
பெற்று - பகுதிஒற்று 
ஆள் - விகுதி

இரட்டித்து இறந்தகாலம் காட்டியது. 
இவ்வாறு நட்டான், தொட்டான், விட்டார் என்று சொற்களையும் பிரித்துக்கொள்க.

14. முற்றெச்சம்

உண்டான் - வினைமுற்று 
உண்டு (வந்தான்) - வினையெச்சம் 
உண்ட (பையன்) - பெயரெச்சம் 

இவற்றை நீங்கள் அறிவீர்கள். கீழ்வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்: கண்ணன் கண்டனன் வந்தான். இதில் உள்ள ``கண்டனன்'' என்பது வினைமுற்று; ஆனால் இங்கே `கண்டு' என்னும் வினையெச்சப் பொருளில் வந்துள்ளது. `கண்ணன்' கண்டு வந்தான்' என்பது வாக்கியத்தின் பொருள். இவ்வாறு ஒரு வினைமுற்று வினையெச்சப் பொருளில் வருமாயின், அவ்வினைமுற்று அவ்விடத்தில் முற்றெச்சம் (முற்று-எச்சம்) எனப்படும்.

(1) இராமன் குகனைத் தழுவினன் மகிழ்ந்தான். 
(2) வீமன் நகைத்தனன் சீறினான். 
(3) தமயந்தி நளனைத் தேடினள் அலைந்தாள். 
தழுவினன், நகைத்தனன், தேடினள் - முற்றெச்சங்கள்.
நன்றிகள்.