Saturday, 16 February 2013

தமிழ்மொழியின் தனித்தன்மை..........!

தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி

1) தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலகத்தின் முதன்மொழி.

2) ஒரு தனிமொழி அல்லது உலக முதமொழியின் ஆக்கத்தினை அல்லது படிநிலை உருவாக்கத்தைத் தமிழ் மொழியே காட்ட வல்லதாக உள்ளது.

3) தமிழ்ச் சொற்கள் இல்லாத மொழிகள் உலகிலேயே ஒன்றுகூட இல்லை.

4) அறிவியல் அல்லது தருக்க (Logical) அமைப்புடையது தமிழ்மொழி.

5) உயர்ந்தனிச் செம்மொழிகள் ( Classical Language ) எனத்தகுதி பெற்றவை ஒருசில மொழிகளே. அவற்றுள் தமிழ் மட்டுமே உலகவழக்கு அற்றுப்போகாமல் முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் போர்த்தும் அப்பெற்றியதாய், இருவழக்கும் பெற்று என்றும் குன்றாத சீரிளமைத் திரத்தோடு நின்று கன்னித்தமிழொன்று வாழ்கின்றது.

6) தமிழ் தனது செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியைவிட பண்பட்டதாயும் சரியானதாயும் ; பேச்சு வழக்கு செய்யுள் வழக்கு ஆகிய இரண்டிலும் கடன்பெற்றுள்ள சொற்செல்வங்களுடன் விளங்கும் இலத்தீன் மொழியைவிடச் சொல்வளம் உள்ளதாயும் விளங்குகிறது என்று குறிப்பிடுவது அளவுகடந்து கூறுவதாகாது. (வின்சுலோ)

7) அது (தமிழ்), இனிமை என்று பொருள்படுதற்கு ஏற்ப அதனிட்த்தில் கேட்டாரைத் தன்வயமாக்கும் இனிமை பொருந்தியிருப்பதற்கு ஐயமில்லை. (வின்சுலோ)

8) ஆற்றல் மிக்கதாகவும், சில சொற்களால் கருத்தைத் தெரிவிப்பதாகவும் விளங்குவதில் தமிழ்மொழியை எந்த மொழியும் மிஞ்சமுடியாது. உள்ளத்தின் பெற்றியை எடுத்துக் காட்டுவதில் வேறெந்த மொழியும் தமிழைவிட இயைந்ததாக இல்லை. (பெர்சிவல்)

9) எந்நாட்டினரும் பெருமைக் கொள்ளக்கூடிய இலக்கியம், தமிழ் இலக்கியம். தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தைத் தருவது. (எப்.டபிள்யு. கெல்லட்)

10) தமிழ் போன்ற தமிழிய மொழிகளை நன்றாகக் ஐரோப்பியர் ஒருவர் அத்தகைய வியத்தகு மொழியை வளர்த்துள்ள மக்கள் இனத்தை மதிப்போடு கருதாமல் இருக்க முடியாது.

11) தமிழ், தான் ஏற்றிருக்கும் சமற்கிருதச் சொற்களில் பெரும்பகுதியை, ஏன் அவை அனைத்தையுமே அறவே கைவிட்டு, அவ்வாறு கைவிடுதாலொன்றிலேயே பெருநிலைமைப் பெற்றுவிடும். (அறிஞர் கார்ல்டுவெல்)

12) பயிலுவதற்கும் அறிவதற்கும் மிக இலேசுடையதாய் , பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், “சாகாக் கல்வியை” எளிதில் அறிவிப்பதாய் அறிவிப்பதாய் அமைந்த்து தமிழ்மொழி.

13) தமிழ்மொழி ஒரு திறவி (சாவி) போன்றது. அதைக் கொண்டு உலகம் என்னும் பெரிய பூட்டைத் திறக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால், தமிழ் ஒரு மாபெரும் மலையைப் போன்றது; அதில் முதலில் ஏறுவதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கும், ஆனால் அதன் உச்சியை அடைந்துவிட்டால் ஒரு புதிய உலகத்தையே பார்க்கலாம். (ஆறாம் உ.த மாநாட்டில் அமெரிக்க அறிஞர்)

14) தொன்மை, முன்மை, ஒன்மை (ஒளிமை), எண்மை (எளிமை), இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை எனப் பதினாறு வளங்களும் நிறைவாக உடையது. (மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள்)

15) எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் மட்டுமல்ல வாழ்க்கையின் இலக்கணமான பொருளிலக்கணமும் முறைப்படக் கொண்டு, அகம்-புறம் என இருதிறத்தும் அறம், பொருள், இன்பம், வீடு என வகைப்பட்டு அவற்றை அறிவு-பகுத்தறிவு-மெய்யறிவு-வாலறிவு எனத் தம் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்பக் கொண்டு ஒழுகி வந்த பொய்யாமை ஏன்ற சமயத்தை அல்லது வாழ்க்கை நெறியை முக்காலப் பொருத்தமாய் உலகினுக்கு தந்தது தமிழேயாகும். (மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர் அ.பு திருமாலனார்)

16) உலக ஒற்றுமை அல்லது மாந்தநேயம் என்று உலகியம் பேசும் அறிஞர்கள்; தனித்தூய தமிழைக் கடைப்போக ஆராய்ந்து பார்ப்பார்கள் ஆயிடின் தமிழே உலகப்பொதுமொழியாய் – தாய்மொழியாய் – உயிரியக்க உறவுமொழியாய் – மாந்தநேய மாண்புவழியாய் – சமய நெறியாய் – ஓருலக இனத்தின் இனப் பெயராய் விளங்கும் நடுநிலையான உண்மையைத் தெளிவர். உலகமக்கள் யாவரும் ஒருமூத்தவர் என்பதறிந்து அகங்களிப்பர் – அகங்கலப்பர் – இகல் மறப்பர். 
நன்றிகள்.