Friday 15 February 2013

தமிழ் மொழியை வளர்ப்பது, கொலை..........!

தமிழ் மொழியை வளர்ப்பது யார்?...தமிழ் மொழியை கொலை செய்வது யார்?


ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. எனும் எனது இடுகை மூலம் பலரும் தமது மனங்களிலே இருந்த உள்ளக் குமுறல்களை கருத்துக்களாக வெளியிட்டு இருந்தனர். காத்திரமான பல கருத்துக்கள் வந்திருந்தன. 

அந்தக்கருத்துக்களை பார்த்தபோது இந்த விடயம் தொடர்பாக இன்னுமோர் இடுகையின் மூலம் சில விடயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு எண்ணம் என் மனதிலே தோன்றியது. இதனால் இன்னும் பல ஆக்கபூர்வமான கருத்துக்களை பெறமுடியும் என்று நினைக்கிறேன்.

இந்த இடுகையின் மூலம் எந்த ஒரு ஊடகத்தையோ, ஊடகவியலாளரையோ குற்றம் சுமத்துவது என் நோக்கமல்ல. இன்று தமிழ் மொழிக் கொலை என்று வந்தாலே எல்லோரும் குற்றம் சாட்டுவது குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்களையே.

தமிழ் மொழியினை கொலை செய்கின்ற ஊடகங்கள் இருக்கின்ற வேளை தமிழ் மொழியினை வளர்ப்பதிலே பல தமிழ் ஊடக நிறுவனங்களும், தமிழ் ஊடகவியலாளரும் பாடு படுகின்றார்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.

ஒரு சிலர் செய்கின்ற தவறுக்காக எல்லோரையும் குற்றம் சொல்வது சரியல்ல. தமிழ் கொலை செய்கின்ற ஊடகங்களும் ஊடகவியலாளரும் திருந்த வேண்டும். என்பதோடு நாகரிக மோகத்தில் தமிழ் மொழியோடு வேற்று மொழிகளை கலப்பதனையுமே நான் தவறு என்று சொல்கிறேன்.

வானொலி, தொலைக்காட்ட்சி போன்றவற்றிலே அறிவிப்பாளர்கள் விடுகின்ற மொழி உச்சரிப்பு, வேற்றுமொழிக் கலப்பு தொடர்பாகவே பலரும் பேசி இருந்தனர். இந்த இடத்திலே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் நானும் ஒரு ஊடகவியலாளன்தான், ஒரு அறிவிப்பாளன்.

நான் தமிழ் மொழி தவறாக உச்சரிப்பதனையும், ஆங்கில வார்த்தைகள் தேவையற்று அதிகம் பயன் படுத்துவதனையும் முற்றாக வெறுப்பவன். தமிழை தமிழாக பயன் படுத்த நினைப்பவன்

ஒரு சிலர் குறிப்பிட்டிருந்தார்கள் நாமும் நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாற வேண்டுமென்று. நான் மாற வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் எமது தமிழ் பாரம்பரியங்களையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் நாகரிகமென்ற போர்வையில் சாகடிப்பதா.

நான் வேற்று மொழிகளை முற்றாக புறக்கணிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆங்கில மொழியினை பயன் படுத்த வேண்டிய இடங்களுக்கு பயன்படுத்தத்தான் வேண்டும். அதற்காக தேவையற்ற விதத்தில் அதிகமாக பயன்படுத்தலாமா.

இன்று ஆங்கில மொழியினை தமிழ் மொழியோடு பயன் படுத்துவது அதிகரித்து வருகின்றது. அன்று ஒரு பத்து வீதமாக இருந்தது என்று வைத்துக் கொள்வோம் இன்று இருபது வீதமாக அதிகரித்து விட்டது என்றால் எதிர் காலத்தில் தமிழோடு ஆங்கில மொழி பயன்பாடு அறுபது வீதமாக அதிகரித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

அந்த மொழியினை தமிழ் மொழி என்பதா அல்லது வேறு ஒரு மொழி என்பதா? போகிற போக்கில் நடக்காமல் விடலாம் என்று சொல்ல முடியாது. தமிழ் மொழி மறைகின்ற நிலைக்கு தமிழர்களாகிய நாம் பங்காளிகளாக இருக்கலாமா.

சில ஆங்கில சொற்களை நாங்கள் பயன்படுத்தியே ஆகவேண்டும். இருந்தாலும் எமது தமிழ் மொழியிலே பல இனிய சொற்கள் இருக்கின்றன. ஒரு சிலரின் குற்றச் சாட்டு சில தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது அதனால் ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறோம் என்று. இக் கருத்தினை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று இலங்கையின் ஊடகங்களிலே தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. இன்னும் பல.. இனிய தமிழ் சொற்கள் பாவிக்கப்படுகின்றன.

இந்த சொற்களை பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை எல்லோரும் இன்று ஏற்றுக் கொள்கின்றனர். இந்த சொற்களின் அறிமுகம் எப்போது வந்தது?. 

ஆரம்பகாலத்தில் இருந்து ஊடகங்களிலே பயன்படுத்தப்பட்டு வந்ததா என்றால் இல்லை. அதிகமானவர்களுக்கு அன்று இந்த சொற்கள் தமிழிலே இருக்கின்றது என்பதே தெரியாது. என்னையும் சேர்த்து.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை. தமிழை வளர்ப்பதிலே பல ஊடகவியலாளர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள். அதன் பயனாகவே இன்று இந்தச் சொற்கள் மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.

அன்று தொட்டு இன்றுவரை பல ஊடகவியலாளர்கள் தமிழ் மொழி வளர்ச்சியில் பங்காற்றி வருகின்றனர். நான் மேலே குறிப்பிட்ட தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி..

அப்போது ஒரு சிலர் மக்களுக்கு விளங்கவில்லை என்று எதிர்த்தனர். ஆனால் இன்று எல்லாராலும் இந்தச் சொற்கள் பயன் படுத்தப் படுகின்றன.

ஊடகங்களிலே இது போன்ற பாவனையில் இல்லாத சொற்களை அறிமுகம் செய்கின்றபோது காலப்போக்கில் பாவனைக்கு கொண்டு வர முடியும். 

அதற்காக எல்லாச் சொற்களையும் வேற்று மொழிச் சொற்களையும் தமிழ் படுத்த முடியாது என்பதனையும் ஏற்றுக் கொள்கிறேன். அவற்றை ஒரு பக்கம் வைத்துவிட்டு தேவையற்ற வேற்றுமொழி கலப்பை தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.

என் நாம் இன்று வலைப்பதிவுகளிலே இடுகை, அமுக்கவும் போன்ற இனிய சொற்களை பாவிக்கின்றோமே. இன்று இணையமும் கூட ஒரு வகையில் தமிழை வளர்க்கின்றது என்று சொல்லலாம்.

அடுத்து வானொலி, தொலைக்காட்சிகளிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்ற விடயத்துக்கு வருகின்றேன். நவின உலகத்துக்கு ஏற்றாற்போல் இன்று எல்லாமே மாறி வருகின்றன.

இதற்கு வானொலி தொலைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. கடுமையான போட்டித்தன்மைகளுக்கு மத்தியிலே தாம் நிலைத்திருக்க வேண்டுமானால். காலத்துக்கேற்ற சில மாற்றங்களையும் இன் நிறுவனங்கள் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.

இதற்காக இவர்கள் நினைத்த எதனையும் செய்யலாமா இன்று சிலர் தாம் நினைத்தபடி மாறுதல் என்ற பெயரில் தமிழ் கொலை செய்து கொண்டு இருக்கின்றனர்.

வானொலி, தொலைக்காட்சிகளின் போட்டித்தன்மை காரணமாக நிலைத்திருக்க வேண்டுமானால் சில ஊடக நிறுவனங்கள் மாற்றங்களை செய்யத்தான் வேண்டும். இன்று பல ஊடக நிறுவனங்கள் பேச்சுத்தமிழை பயன்படுத்துகின்றன.

பேச்சுத்தமிழில் பேசுகின்றபோது எல்லோருக்கும் இலகுவாக விளங்கிக் கொள்ளமுடியும். இது ஒரு புறமிருக்க இதனை ஒரு சாட்டாக வைத்து வேற்று மொழி கலந்து பேசுவதை சில அறிவிப்பாளர்கள் கடைப்பிடிப்பதுதான் கவலைக்குரிய விடயம்.

சில அறிவிப்பாளர்கள் விடுகின்ற தவறுகளை சொல்வதென்றால் அதற்கென ஒரு வலைப்பதிவு தொடக்கி எழுதிக்கொண்டே போகலாம்.

அறிவிப்பாளர்கள் எல்லோரும் பிழை விடுவதில்லை, தமிழை கொலை செய்வதில்லை சில அறிவிப்பாளர்கள் இருக்கின்றார்கள் லகர ழகர ளகர தெரியாமல் திண்டாடுகின்றனர். அது மட்டுமல்ல சில தமிழ் சொற்கள் அவர்களின் வாயில் இருந்து வருவதற்கு கடினமாகவே உள்ளது.

சில அறிவிப்பாளர்கள் இனிய தமிழை மறந்து அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவது என். இவர்களுக்கு தமிழ் தெரியாதா. தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் தமிழ் அறிவிப்பாளராக வந்தார்கள்.

ஆங்கில அறிவிப்பாளராக போயிருக்கலாம்தானே. இவர்கள் விடுகின்ற தவறுகளும் ஓட்டு மொத்த அறிவிப்பாளர்களையும் பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து திருந்துவதே நல்லது (திருந்துவார்களா)

இன்று பல ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளரும் தமிழ் மொழி வளர்ச்சியிலே பங்காற்றி வருகின்றார்கள் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.

மக்களால் பயன் படுத்தப்படாமல் இருக்கின்ற தமிழ் சொற்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வேற்று மொழிக்கலப்பை தடுக்க ஊடகங்களால் முடியும் என்பதே உண்மை.

எது எப்படி இருப்பினும் தமிழை தமிழாக பயன் படுத்த வேண்டும். தாய் மொழியினை தமிழாகக் கொண்ட எல்லோரும் தமிழ் மொழி வளர்ச்சியிலே பங்கெடுக்க வேண்டும். என்பதே என் கருத்தாகும்.
நன்றிகள்.