Saturday 3 December 2011

மருத்துவக் குறிப்புக்கள்


நீரிழிவு நோயாளர்கள் எத்தகைய எவ்வளவு பழங்கள் சாப்பிடலாம்?

"சீனி வருத்தம் வந்தாப் பிறகு நான் பழங்கள் சாப்பிடுறதை விட்டிட்டன்' என்று யாராவது சொன்னால் அதைவிட மோட்டுத்தனமான கருத்து வேறு எதுவும் இருக்கமாட்டாது.

"அதேபோல பழங்கள் இனிப்பு அல்லவா, எனவே நீரிழிவு நோய்க்கு கூடாதுதானே?" என யாராவது கேட்டால் அதைத் தவறு என்று சொல்லவும் முடியாது.
  
ஏனெனில் பழங்களில் பிரக்கோஸ் (Fructose) என்ற இனிப்பு இருக்கிறது. (சீனியில் இருப்பது சுக்கிறோஸ்- Sucrose). இனிப்புள்ள உணவு என்றால் அதில் கலோரிச் சத்து இருக்கும்தானே. அத்துடன் உணவில் சீனிச்சத்து அதிகரித்தால் நீரிழிவாளர்களின் இரத்தத்திலும் அதிகரிக்கும் என்பதும் உண்மைதான்.

ஆனால் அதே நேரம் பழங்களில் எமது ஆரோக்கியத்திற்கு உகந்த நல்ல போசனைப் பொருட்கள் பலவும் உண்டு. நிறைய விட்டமின் சி, விட்டமின் ஏ, அன்ரி ஒக்ஸசிடனட், நார்ப்பொருள் எனப் பல. 


தோடையினத்தைச் சேர்ந்த புளிப்புச் சுவையுள்ள பழங்களில் இருப்பதுகரையக் கூடிய நார்ப் பொருள் (Digestible fiber)ஆகும். இந்தக் கரையக் கூடிய நார்ச் சத்துகள் எமது குருதியில் உள்ள கொலஸ்டரோலைக் குறைக்க உதவும். பெரும்பாலான நீரிழிவு நோயாளர்களுக்கு கொலஸ்டரோல் அதிகமாகவே இருக்கிறது. எனவே உணவுக் கட்டுப்பாடுகள், உடற் பயிற்சி ஆகியவற்றுடன் பழங்களை உண்பதும் அவர்களது கொலஸ்டரோல் அளவைக் குறைக்க உதவும்.

பழங்களைத் தவிர அரிசி, ஓட்ஸ், போன்ற தானியங்களில் உள்ள தவிட்டிலும், பயறு, பருப்பு, சோயா, கடலை போன்ற அவரையின உணவுகளிலும் கரையக் கூடிய நார்ப்பொருள் இருக்கிறது. எனவே அவையும் நீரிழிவு நோயாளருக்கு நல்லது.

ஏனைய பல பழங்களில் கரையாத நார்ப்பொருள் (non digestible fiber)உண்டு. இவை நாம் உண்ணும் உணவுகள் சமிபாடடையும் வேகத்தைக் குறைக்கின்றன. அதனால் ஊட்டச் சத்துகள் குடற் தொகுதியால் உறிஞ்சப்படுவதையும் தாமதப்படுத்துகின்றன. இதனால் நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்தில் உணவின் பின் சீனியின் அளவு தீடீரென ஏறுவதையும் தடுக்கிறது. 

"பழங்களில் நார்ப் பொருள் அதிகமாக இருப்பதால் அதை நான் நிறையச் சாப்பிடலாமா" எனக் கேட்டால் அதுவும் தவறுதான்.

நல்லது என்பதற்காக எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக உண்பது தவறு.


தினமும் இரண்டு பரிமாறல் அளவிற்குப் பழங்களை உண்பது நல்லது. ஒரு பாரிமாறல் என்பது சராசரியாக 15 கிறாம் மாப்பொருள் (Carbohydrate) கொண்டதாக இருக்கும். இதில் கிட்டத்தட்ட 60 கலோரிச் சத்து இருக்கும்;.

ஒரு பரிமாறலிலுள்ள பழங்கள் சிலவற்றின் அளவானது

ஆப்பிள் நடுத்தர சைஸ் ½ 
கதலி நடுத்தர சைஸ் 1 பழம்
ஆனைவாழை, கப்பல் ½ பழம்
பப்பாளி 3 துண்டுகள்
மாம்பழம் 1 ½  துண்டு
பேரிச்சம்பழம் 3
திராட்சை 15
ஆரஞ்சு 1
மாதுளை ½
பிளம்ஸ் 3
அன்னாசி 1 ½ துண்டுகள்
வோட்டர் மெலன் 1 ¼ கப்
கொய்யா நடுத்தரம் 1
அன்னாசி ¾ அங்குல தடிப்பான துண்டுகள் 1 ½

மேற் கூறியவற்றில் ஏதாவது ஒரு கூற்றை தினமும் இரண்டு தடவைகள் சாப்பிடலாம். ஏனைய பழங்களையும் அவற்றின் கலோரிப் பெறுமானத்தை அறிந்து அதற்கு ஏற்ப உண்ண வேண்டும்.

எனவே நீரிழிவு நேயாளர்கள் பழங்கள் சாப்பிடுவது அவசியம். மேற் கூறிய வழிகாட்டி உங்களுக்கு உதவும்.
.


(நன்றிகள் டொக்டர்.எம்.கே.முருகானந்தன்)