Friday, 9 December 2011

மலரத்துடிக்கும் மொட்டுக்கள்!
கொஞ்சி விளையாடும் குழந்தைப் பருவத்திற்கு அடுத்து வருவது வளர் இளம் பருவம் .

இந்த பருவத்திற்கு உட்பட்டவர்கள் குழந்தையாகவும் இல்லாமல் வயது வந்தவர்களாகவும் இல்லாத நிலை. அதனால் அவர்களுக்குள் தாங்கள் யார் என்று அடையாளம் காண்பதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு நெருக்கடி (Identity Crisis) அவர்களும் வளர் இளம் பருவத்தில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள்


ஒவ்வொருவருக்குள்ளும் நிகழும். மளமளவென்று உடலின் உயரம் கூடும். பேச்சிலும் செயலிலும் குழந்தைத்தனம் குறையும்.

இதுவரை குடும்பத்திற்குள்ளேயே வலம் வந்தவர்கள் இனி வீட்டையும் தாண்டி வெளி உலகத்திற்கு வரத்துடிப்பார்கள். தங்களுக்கென சொந்தமான ஒரு தன் உணர்வை தேடிக் கொண்டிருப்பார்கள்.

அக்கம் பக்கத்தில் உள்ள சம வயதினரோடு நட்புறவை வளர்க்க ஆசைப்படுவார்கள். புதிய நண்பர்களின் வரவு அவர்களுக்கு பேரானந்தத்தைக் கொடுக்கும். அவர்களது வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள் தெரிய வரும்.

தங்கள் தலைமுடியை பிறரின் உதவியின்றி தாங்களே சீவி சிங்காரித்துக் கொள்வார்கள். பவுடரை முகத்தில் அப்பிக் கொள்வார்கள். தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பிறரின் உதவிகளை நாடுவதை தவிர்ப்பார்கள்.

மொத்தத்தில் தங்களுக்கு தாங்களே ஒரு சுய காரியதரிசியாக இருக்க விரும்புவார்கள். வளர் இளம் பருவத்தினர் மொட்டுக்கள் போன்றவர்கள், மிக கவனமாக கையாளப்பட வேண்டியவர்கள். இந்த பருவத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ஆலோசனைகள் அதிகமாக தேவைப்படுவது பெற்றோர்களுக்குத்தான்.


இந்த பருவத்தினை எவ்வளவு பக்குவமாக கையாளப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒவ்வொரு பெற்றோருக்கும் மிக அவசியம். அப்படிப்பட்ட விழிப்புணர்வு உருவாக தாங்கள் கடந்து வந்த அதே வளர் இளம் பருவத்தை பெற்றோர்கள் நியாயப்படுத்தி பார்க்க வேண்டும்.

இப்பருவத்தினருடன் பேசுவதை விட அதிகமாக அவர்களின் பேச்சை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்களுக்கு மனித வாழ்க்கையில் சந்தோஷங்களையும் சோகங்களையும் சொல்லி கொடுக்க வேண்டும்.

அப்போது தான் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம் அவர்களுக்கு ஏற்பட வழிவகுக்கும். இப்பருவத்தினரோடு பழகும் போது எதிர்மறைவான பேச்சையும், நடவடிக்கைகளையும் பெற்றோர்கள் கவனத்தோடு தவிர்த்து விட வேண்டும்.

அதுவே ஆரோக்கியமான மனநோக்கு இவ்வயதினருக்கு ஏற்பட துணையிருக்கும். இதுமட்டுமல்ல குடும்பத்தில் ஜனநாயக சூழ்நிலையை உருவாக்கி குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுப்பதில் இவர்களும் பங்கு கொள்ளுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
.
இது அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க பயன்படும். அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க விடுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. வீட்டு விசேஷங்கள், சுற்றுவட்டார சமுதாய நிகழ்ச்சிகள் என்று வெளி உலக நிகழ்வுகளில் அவர்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பொறுப்புணர்ச்சி மேலோங்க இது உதவும். இந்த பருவத்தினர் வீட்டில் இருக்காமல் வெயிலிலேயே சுற்றித் திரிகிறார்கள் என்று புலம்புவதை விட்டு விட்டு அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் பெற்றோர்கள் அவர்களோடு தரமான முறையில் அதிக நேரத்தை முதலீடு செய்ய வேண்டும்.

குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து உற்சாகமாக உறவாடி ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும். நாமும் இந்த பருவத்தில் இப்படித்தான் இருந்தோம் என்று பெற்றோர்கள் உணர வேண்டும்.

நல்ல பெற்றோர்களாக இருப்பதனால் நாம் பூரணத்துவம் அடைந்தவர்கள் (Perfect humanbeings) என்று கருதி விட வேண்டாம்.

மலரத்துடிக்கும் இந்த மொட்டுக்கள் பெற்றோர்களிடம் எதிர்பார்ப்பது இரண்டே இரண்டுதான். ஒன்று இதுவரை குழந்தையாக இருந்த போது கிடைத்து வந்த அன்பும், அரவணைப்பும், இரண்டாவது இதுவரை அவர்களுக்கு கிடைக்காத சுதந்திரமும், தன்னிச்சையாக செயல்படும் வாய்ப்பும் தான்.

அதை தயங்காமல் வழங்குவது தான் விவேகம். மலரட்டும் நம் மொட்டுக்கள். வளரட்டும் நமது வார்ப்புக்கள்!.

(நன்றிகள் கல்வி மலர்)